இந்தியாவிற்காக விளையாடாதவர்: இன்று தலைமை பயிற்சியாளராக உலகக்கோப்பையை வென்றவர்....யார் இவர் ?

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை;

Update:2025-11-03 22:16 IST

மும்பை,

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் தங்களது முதல் மகுடத்துக்காக இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மல்லுக்கட்டின. மழை காரணமாக ஆட்டத்தை தொடங்க 2 மணி நேரம் தாமதம் ஆனது. ஆனாலும் ஓவர் ஏதும் குறைக்கப்படவில்லை. இரு அணியிலும் அரையிறுதியில் ஆடிய வீராங்கனைகள் மாற்றமின்றி அப்படியே இடம் பெற்றனர். இதில் டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 87 ரன்களும், தீப்தி ஷர்மா 58 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயாபோங்கா காகா 3 விக்கெட் கைப்பற்றினார். பின்னர் இறுதிப்போட்டியில் இதுவரை யாரும் விரட்டிப்பிடிக்காத ஒரு இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்களில் சுருட்டினர். இதன் மூலம் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை தட்டித்தூக்கியது.

சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், இந்திய வீராங்கனைகள் தலைமை பயிற்சியாளர் அமோல் முஜும்தாரிடம் வாழ்த்து பெற்றனர். யார் இந்த அமோல் முஜும்தார் என்ற பலரும் இணையத்தில் அவரை தேடி வருகின்றனர்.

*1974 ஆம் ஆண்டு அமோல் முஜும்தார் மும்பையில் பிறந்தார்.

*அமோல் முஜும்தார் 171 முதல்தர போட்டிகளில் விளையாடி 30 சதங்கள், 60 அரைசதங்களுடன் 11167 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 48.13 ஆகும். 

*உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அமோல் முஜும்தார் 2014 ஆம் ஆண்டில், முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

*அதன்பின்னர் பயிற்சியாளர் என்ற புதிய அவதாரம் எடுத்தார்.  தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளாகவும் பணியாற்றினார்.

*2023 ஆம் ஆண்டு இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.

*தற்போது இந்தியாவிற்காக தலைமை பயிற்சியளராக உலகக்கோப்பையை வென்று கவனம் ஈர்த்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்