மகளிர் உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்? இந்தியா-தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்
இறுதிப்போட்டி என்பதால் இரு அணிக்குமே கடும் சவாலும், நெருக்கடியும் இருக்கும்.;
மும்பை,
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் கோதாவில் குதிக்கின்றன.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 3 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் (7 புள்ளி) 4-வது இடம் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.2005, 2017-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை கோட்டை விட்ட இந்திய அணி, தங்களது கோப்பை கனவை இந்த முறையாவது நனவாக்கிட வேண்டும் என்று களத்தில் கடுமையாக போராடி வருகிறது.
தென்ஆப்பிரிக்க அணி லீக் சுற்றில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் (10 புள்ளி) 3-வது இடம் பிடித்து அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. அரையிறுதியில் 4 முறை சாம்பியனான இங்கிலாந்தை விரட்டியடித்து முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.மொத்தத்தில் முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது இறுதிப்போட்டி என்பதால் இரு அணிக்குமே கடும் சவாலும், நெருக்கடியும் இருக்கும். அதை எந்த அணி திறம்பட சமாளிக்கிறதோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.
இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் மாற்று நாளான மறுநாளில் நடைபெறும்.இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.39½ கோடி பரிசாக வழங்கப்படும். 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.19¾ கோடி கிடைக்கும்.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.