ஷிவம் துபேவை 3-வது வரிசையில் களமிறக்கியது ஏன்..? கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம்

வங்காளதேசத்துக்கு எதிரான சூப்பர்4 சுற்று ஆட்டத்தில் ஷிவம் துபே 3-வது வரிசையில் களமிறங்கினார்.;

Update:2025-09-25 09:58 IST

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இதில் நேற்று நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் மோதின. இதில் டாஸ் ஜெயித்த வங்காளதேச பொறுப்பு கேப்டன் ஜேக்கர் அலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 75 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரிசாத் ஹூசைன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து 169 ரன் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி 19.3 ஓவர்களில் 127 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேச அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சைப் ஹசன் 69 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

சூப்பர்4 சுற்றில் தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்த 8 முறை சாம்பியனான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி கடைசி லீக்கில் நாளை இலங்கையை சந்திக்கிறது. இறுதிப்போட்டி 28-ந்தேதி நடக்கிறது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி தரப்பில் ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவுக்கு முன்பாக 3-வது வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கினார். ஆனால் அந்த வாய்ப்பில் அவர் 2 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் 4-வது வரிசையில் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அத்துடன் சாம்சனுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஷிவம் துபேவை 3-வது வரிசையில் களமிறக்கியது ஏன்? என்பது குறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “இந்த தொடரில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை அதிகம் பெறவில்லை. ஓமனுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்தோம் என்று நினைக்கிறேன். ஆனால் சூப்பர்4 சுற்றில் முதலில் பேட்டிங் செய்து எப்படி இருக்கும் என்று பார்க்க விரும்பினோம். அவர்களின் பந்து வீச்சு அணியைப் பார்த்தால், ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளரும் ஒரு லெக் ஸ்பின்னரும் இருந்தனர்.

அதன் காரணமாக 7-15 ஓவர்கள் வரம்பில் துபே சரியான தேர்வாக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அது வேலை செய்யவில்லை. அப்படித்தான் விஷயங்கள் நடக்கின்றன. அவுட் பீல்டு மிகவும் வேகமாக இருந்திருந்தால், 180-185 ரன்கள் அடித்திருப்போம். ஆனால் எங்களிடம் உள்ள பந்து வீச்சு அணியுடன், 12-14 நல்ல ஓவர்களை வீசினால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எங்களால் வெற்றி பெற முடியும்” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்