ஜடேஜா - சாம்சன் மாற்றம் ஏன்..? ரசிகர்களுக்கு சிஎஸ்கே சிஇஓ விளக்கம்
ஜடேஜா மற்றும் சாம் கர்ரனை கொடுத்து விட்டு சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்கியுள்ளது.;
image courtesy:PTI
மும்பை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை வாங்க ராஜஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அவருக்கு பதிலாக முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டது.
சென்னை நிர்வாகமும் அதற்கு ஒப்புக்கொண்ட நிலையில் ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தானுக்கு கொடுத்து விட்டு சஞ்சு சாம்சனை அணி வாங்கியுள்ளது. ரூ.18 கோடிக்கு சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கியுள்ளது. ஜடேஜாவை ரூ.14 கோடிக்கும், சாம் கர்ரனை ரூ.2.4 கோடிக்கும் ராஜஸ்தான் வாங்கியுள்ளது.
இதில் ரவீந்திர ஜடேஜா 2012-ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடினார். 2023-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் குஜராத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி தேடித்தந்ததை மறந்து விட முடியாது. கடந்த சீசனில் அவரை ரூ.18 கோடிக்கு சென்னை அணி தக்க வைத்திருந்தது. அப்படிப்பட்ட அவரை சிஎஸ்கே வேறு அணிக்கு மாற்றி உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ஜடேஜா மற்றும் சாம் கர்ரனை கொடுத்து விட்டு சாம்சனை வாங்கியது ஏன்? என்று சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) காசி விஸ்வநாதன் ரசிகர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “ஜடேஜா, சாம் கரணை டிரேட் செய்தது சிஎஸ்கே நிர்வாகம் எடுத்ததிலேயே மிகவும் கடினமான முடிவு. வீரர்களை கலந்தாலோசித்து ஒருமித்த கருத்துடன் இந்த முடிவை எடுத்தோம். ஒரு அணியாக நாங்கள் பல ஆண்டுகளாக டிரேடிங்கை பயன்படுத்தியதில்லை. அதே சமயம் தற்போது சிஎஸ்கே அணி வருங்காலத்தை நோக்கிய மாற்றத்தில் இருப்பதால் இந்த கடினமான முடிவை நிர்வாகம் எடுக்க வேண்டியுள்ளது.
அணி மேலாண்மை இந்திய டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன் தேவையென உணர்ந்தது. ஏலத்தில் அதிகமான இந்திய பேட்ஸ்மேன்கள் கிடைக்கப் போவதில்லை என்பதால், டிரேடிங் மூலம் ஒரு இந்திய டாப்-ஆர்டர் பேட்ஸ்மேனைப் பெறுவது சிறந்தது என்று கருதினோம். அதனால் இந்த முடிவை எடுக்க வேண்டி வந்தது.
அதற்கு முன்பாக வீரர்களிடம் அது பற்றி பேசுவது முக்கியம். ஜடேஜாவுடன் கலந்தாலோசித்த பின்பே நாங்கள் இந்த முடிவை எடுத்தோம். அவரும் நிலைமையைப் பொறுத்து மிகவும் தெளிவாக இருந்தார். அவர் தனது வெள்ளைப்பந்து கிரிக்கெட் (ஒருநாள் மற்றும் டி20) வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் உள்ளதாக நினைத்ததால், இந்த வாய்ப்பு அவருக்கு ஓய்வாக இருக்கும் எனவும் கூறினார்.
இருப்பினும் ஜடேஜா பல ஆண்டுகளாக சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததால் அவரை பிரிவது மிகக்கடினமான முடிவாக இருந்தது. எங்கள் அணியில் குறிப்பிட்ட வீரர்கள் கேரியரின் இறுதியில் உள்ளார்கள். அதனால் அடுத்த சில ஆண்டுகளில் சிஎஸ்கே அணியை மறுவளம் செய்யுவது மிகவும் முக்கியமானது.
சிஎஸ்கே அணியை புதிதாக கட்டமைக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ள எங்களுக்கு மினி ஏலத்தில் சிறந்த இந்திய பேட்ஸ்மேனை (சாம்சன்) வாங்கும் வாய்ப்பு கிடைக்காது. அதனாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சஞ்சு ஐபிஎல்-ல் மிகவும் அனுபவமிக்க பேட்ஸ்மேன்களில் ஒருவர், 4,500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். அத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸை வழிநடத்தியுள்ளார். அவருக்கு அனுபவம் உள்ளது மற்றும் அவர் வயது வெறும் 30தான். எனவே எதிர்காலத்தை கவனித்துக் கொள்ள சிஎஸ்கே-ல் சஞ்சு ஒரு நல்ல சேர்க்கையாக இருப்பார் என்று நினைத்தோம்.
இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் இருப்பார்கள். இருப்பினும் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு மாற்றம் தேவை என்று நாங்கள் கருதினோம். இதனால் சிஎஸ்கே அணியின் வருங்கால வெற்றிகள் மற்றும் செயல்திறன் தொடரும் என்று நம்புகிறோம்” என கூறினார்.