மகளிர் கிரிக்கெட்: ஆஸி.க்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி போராடி தோல்வி
ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.;
புதுடெல்லி,
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றன. இதன் காரணமாக தொடர் 1-1 என சமனில் இருந்தது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடியது. அந்த அணியில் ஜார்ஜியா , எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி ஆகியோர் அதிரடியாக விளையாடினர். ஜார்ஜியா, எல்லிஸ் பெர்ரி அரைசதம் அடித்தனர் .மறுபுறம் பெத் மூனி நிலைத்து விளையாடி சதமடித்து அசத்தினார் . அவர் 75 பந்துகளில் 138 ரன்கள் குவித்தார். இறுதியில் 47.5 ஓவர்கள் முடிவில் 412 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணி ஆட்டமிழந்தது. தொடர்ந்து 413 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடியது.
தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா , பிரதிகா ராவல் களமிறங்கினர் பிரதிகா ராவல் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹர்லீன் தியோல் 11 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து ஹர்மன்பிரீத் கவுர் களமிறங்கினார். மறுபுறம் ஸ்மிருதி மந்தனா அதிரடி காட்டினார். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த் அவர் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார் .தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 50 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இந்த சதத்தால் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் அதிகவேக சதமடித்தவர் என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்தார். மறுபுறம் ஹாமன்பிரீத் கவுர் அரைசதமடித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா 125 ரன்களில் ஆட்டமிழந்தார்.
எனினும், ஒரு முனையில் தீப்தி சர்மா அரைசதமடித்து, அணியின் வெற்றிக்காக போராடினார். ஆனால் அவரும் 72 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 47 ஓவர்களில் 369 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 1-2 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.