மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை: மந்தனா முதலிடத்தில் நீடிப்பு
மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.;
Image Courtesy: @BCCIWomen
துபாய்,
மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்டர்களின் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா முதலிடத்தில் நீடிக்கிறார். சமீபத்தில் டெல்லியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 50 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்த அவர் 32 தரவரிசை புள்ளிகளை கூடுதலாக சேர்த்து மொத்தம் 818 புள்ளிகளுடன் அரியணையில் உள்ளார்.
தரவரிசையில் அவர் பெற்ற அதிகபட்ச புள்ளிகள் இது தான். இங்கிலாந்தின் நாட் சிவெர் (731 புள்ளி) 2-வது இடத்தில் உள்ளார். இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 138 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 3 இடங்கள் உயர்ந்து 3-வது இடம் (727) வகிக்கிறார்.
லாகூரில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் 171 ரன்கள் குவித்து மிரட்டிய தென்ஆப்பிரிக்காவின் தஸ்மின் பிரிட்ஸ் 15 இடங்கள் எகிறி 6-வது இடத்துக்கு வந்துள்ளார். தென்ஆப்பிரிக்க தொடரில் 121 ரன், 122 மற்றும் 50 ரன்கள் வீதம் எடுத்த பாகிஸ்தானின் சித்ரா அமின் 10 இடங்கள் உயர்ந்து 13-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14-வது இடத்திலும் (2 இடம் குறைவு), தீப்தி ஷர்மா 18-வது இடத்திலும் (6 இடம் அதிகரிப்பு), ஜெமிமா ரோட்ரிக்ஸ் 20-வது இடத்திலும் (5 இடம் சறுக்கல்) உள்ளனர்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் முதல் 3 இடங்களில் முறையே இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்ட்னர், மேகன் ஸ்கட் நீடிக்கிறார்கள்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா 2 இடங்கள் ஏற்றம் கண்டு 5-வது இடத்தை பெற்றுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் கிரந்தி கவுட் 23 இடங்கள் முன்னேறி 39-வது இடத்தை பிடித்துள்ளார்.