மகளிர் பிரீமியர் லீக்: நட்சத்திர வீராங்கனை விலகல்.. பெங்களூரு அணிக்கு பலத்த பின்னடைவு
இவருக்கு பதிலாக சினே ராணா பெங்களூரு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.;
image courtesy: PTI
பெங்களூரு,
3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் நேற்று தொடங்கியது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆன பெங்களூரு அணி, குஜராத் ஜெயன்ட்சை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
முன்னதாக பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த நட்சத்திர வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டீல், காயம் காரணமாக முதல் போட்டியில் களமிறங்கவில்லை. தாடை பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வரும் அவர், இந்த தொடருக்குள் குணமடைந்து விடுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது.
இருப்பினும் ஷ்ரேயங்கா பாட்டீல் நடப்பு தொடருக்குள் முழுமையாக குணமடைய வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரிலிருந்து ஷ்ரேயங்கா பாட்டீல் விலகியுள்ளார். இவரது விலகல் பெங்களூரு அணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
ஏனெனில் கடந்த முறை பெங்களூரு கோப்பையை வெல்வதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இறுதிப்போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கு வழங்கப்படும் ஊதா தொப்பியை கடந்த முறை கைப்பற்றினார். இவருக்கு பதிலாக சினே ராணா பெங்களூரு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.