மகளிர் உலகக்கோப்பை: இலங்கை அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

இலங்கை அணி 45.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் எடுத்தது.;

Update:2025-10-11 22:47 IST

Image Courtesy : @cricketworldcup

கொழும்பு,

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து மோதின.

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள மைதானத்தில் ஆட்டம் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபத்து பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. அந்த அணியில் நாட் ஸ்கைவர் நிலைத்து ஆடினார். அவர் சதமடித்து அசத்தினார் . நாட் ஸ்கைவர் 117 ரன்கள் எடுத்தார். டாமி பியூமண்ட் 32 ரன்கள் எடுத்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் இனோகா ரணவீர 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 254 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஹாசினி பெரேரா 35 ரன்களும், கேப்டன் சமாரி அத்தப்பத்து 15 ரன்களும் எடுத்தனர். விஷ்மி குணரத்னே 10 ரன்களில் அவுட் ஆனார். நிதானமாக ஆடிய ஹர்ஷிதா 33 ரன்களில் கேட்ச் ஆனார்.

அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் இலங்கை அணி 45.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்