மகளிர் உலகக்கோப்பை: இந்தியா வெற்றி- தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர்கள் மீது கிரிக்கெட் விமர்சகர் சாடல்
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.;
கேப்டவுன்,
நவி மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து கோப்பையை தட்டிதூக்கியது. அப்போது மைதானத்தில் குழுயிருந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களின் கரவொலியால் ஸ்டேடியமே குலுங்கியது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு அந்த நாட்டினரிடமே போதிய ஆதரவு கிடைக்கவில்லை என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் விமர்சகரான தன்ஜா வூர் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “இந்தியா, நீங்கள் உலகக்கோப்பையை வென்று விட்டீர்கள். அதற்கு தகுதியானவர்கள். உங்களுக்கு வாழ்த்துகள் குவிகிறது. இந்த சமயத்தில் இன்னொரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். இந்திய அணிக்கு ரசிகர்களின் அமோக ஆதரவு ஒரு பக்கம் என்றால், சச்சின் தெண்டுல்கர், ரோகித் சர்மா, வி.வி.எஸ். லட்சுமண் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஸ்டேடியத்திற்கே வந்து வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர்.
ஆனால் எங்களது வீராங்கனைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து யாராவது வந்தார்களா? விளையாட்டை நேசிக்கும் எங்களது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எங்கே போனார்கள்? தென் ஆப்பிரிக்கா விளையாட்டுத்துறை மந்திரி உள்பட பிரபலங்கள் யாரும் வரவில்லை. இந்த நிகழ்வு உங்களுக்கு பிரமாண்டமானதாக தெரியவில்லையா? இவர்கள் யாரும் வராதபோது, மனதில் என்ன நினைக்கத் தோன்றும்.
நாங்கள் (தென் ஆப்பிரிக்கா) தோற்று விடுவோம், அதனால் அங்கு சென்று என்ன பலன் என நினைத்து விட்டார்களா? அதுதான் இன்றைய நாளில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசம். தென் ஆப்பிரிக்காவுக்கு கிரிக்கெட்டில் அக்கறை இல்லை என ஆஸ்திரேலியர்கள் சொல்வது உண்டு. அதனை முதல்முறையாக நான் நம்ப வேண்டியதாகி விட்டது” என்று கூறியுள்ளார்.