பெண்கள் உலகக்கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி
பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 49.3 ஓவர்களில் இலக்கை கடந்தது.;
விசாகப்பட்டினம்,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்காளதேசம் அணிகள் ஆடின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
தொடர்ந்து வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக பர்கானா ஹோக் மற்றும் ரூபியா ஹைதர் ஆகியோர் களம் கண்டனர். இதில் ரூபியா ஹைதர் 25 ரன்னிலும், பர்கானா ஹோக் 30 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து ஷர்மின் அக்தர் மற்றும் நிகர் சுல்தானா ஜோடி சேர்ந்தனர்.
இதில் நிகர் சுல்தானா 32 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஷர்மின் அக்தருடன் ஷோர்னா அக்தர் ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் ஷர்மின் அக்தர் 50 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் கண்ட சோபனா மோஸ்டரி 9 ரன்னிலும், ரபேயா கான் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இறுதியில் வங்காளதேச அணி 50 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 232 ரன்கள் எடுத்தது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ மிலாபா 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 233 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் லாவ்ரா 31 ரன்கள் எடுத்தார். மரிசேன் மற்றும் க்லோ ஆகியோர் அரைசதமடித்தனர். வங்காளதேச அணியின் அபார பந்துவீச்சால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தது. எனினும், பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 49.3 ஓவர்களில் இலக்கை கடந்தது. இதன் மூலம் அந்த அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.