மகளிர் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல்
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது.;
image courtesy:twitter/@BCCIWomen
பெங்களூரு,
8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதனையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
பெங்களூருவில் நேற்று நடந்த ஒரு பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 42 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சோபி டிவைன் 54 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ஸ்ரீ சரணி 3 விக்கெட்டும், கிராந்தி கவுட், அருந்ததி ரெட்டி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி இந்திய அணிக்கு 42 ஓவர்களில் 237 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை நோக்கி ஆடிய இந்திய அணி 40.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 74 ரன்னும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 69 ரன்னும் எடுத்தனர்.