இளையோர் டெஸ்ட்: ஆயுஷ் மாத்ரே அபார சதம்.. முதல் நாளில் இந்திய அணி 450 ரன்கள் குவிப்பு
இந்தியா-இங்கிலாந்து ஜூனியர் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று தொடங்கியது.;
image courtesy:PTI
பெக்கன்ஹாம்,
இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர் நடைபெறுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெக்கன்ஹாமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மாத்ரே - வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். இதில் சூர்யவன்ஷி 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதனையடுத்து மாத்ரேவுடன், விஹான் மல்ஹோத்ரா கைகோர்த்தார். இருவரும் இணைந்து இந்திய அணிக்கு வலுசேர்த்தனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில் விஹான் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாவ்டா 11 ரன்களில் நடையை கட்டினார்.
அடுத்து வந்த அபிக்யான் குண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் அபாரமாக ஆடி சதமடித்து அசத்திய ஆயுஷ் மாத்ரே 102 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அபிக்யான் குண்டு - ராகுல் குமார் ஜோடி சேர்ந்து அணியை வலுவான நிலையை நோக்கி பயணிக்க வைத்தனர். இருவரும் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அபிக்யான் குண்டு 90 ரன்களிலும், ராகுல் குமார் 85 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 450 ரன்கள் குவித்துள்ளது. ஆர்எஸ் ஆம்ப்ரிஷ் 31 ரன்களுடனும், ஹெனில் படேல் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.