தமிழ்நாடு கால்பந்து சங்கத் தேர்தலுக்கு தடை இல்லை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பல்வேறு மாவட்ட கால்பந்து சங்கங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.;
புதுடெல்லி,
தமிழ்நாடு கால்பந்து சங்கத்துக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில், ஏற்கனவே உள்ள 22 உறுப்பினர்களுடன், சென்னை, திருநெல்வேலி, கோவை மற்றும் திருச்சியை சேர்ந்த 4 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மாவட்ட கால்பந்து சங்கங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தேர்தலை ரத்துசெய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை கால்பந்து சங்கத்தின் சார்பில் வக்கீல் ஜெய்கிருதி எஸ்.ஜடேஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்யகாந்த், ஜய்மாலா பக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்று, மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு கால்பந்து சங்கம் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 19-ந்தேதிக்கு தள்ளிவைத்தது. மேலும், தமிழ்நாடு கால்பந்து சங்கத்துக்கு கடந்த மே மாதம் நடத்தப்பட்ட தேர்தலை ரத்துசெய்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.