ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: இந்திய அணி காலிறுதிக்கு முன்னேற்றம்
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள சோலோ நகரில் நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
சோலோ,
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள சோலோ நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 17 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
இதில் 'டி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 110-83 என்ற புள்ளி கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தை தோற்கடித்து தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்தது. முதலாவது ஆட்டத்தில் இலங்கையை வென்று இருந்தது.
இந்த பிரிவில் தலா 2 வெற்றி பெற்றுள்ள இந்தியா, ஹாங்காங் அணிகள் இன்னும் ஒரு ஆட்டம் மிஞ்சி இருக்கும் நிலையில் காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தன. 2 தோல்வியை சந்தித்த ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன. இந்த பிரிவில் முதலிடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.