ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை
ஆசிய சாம்பியன்ஷிப்பில் தனிநபர் பிரிவில் கைப்பற்றிய 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்;
ஷிம்கென்ட்,
16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை இளவேனில் 253.6 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். சீன வீராங்கனை ஜின்லு பெங் (253 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், தென்கொரிய வீராங்கனை என்ஜி கோன் (231.2 புள்ளி) வெண்கலப்பதக்கமும் வென்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை மெகுலி கோஷ் (208.9 புள்ளி) 4-வது இடமே பெற்றார்.
குஜராத்தில் வசித்து வரும் 26 வயதான இளவேனில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். உலகக் கோப்பை போட்டியில் பல தங்கப்பதக்கங்களை வென்று இருக்கும் இளவேனில் ஆசிய சாம்பியன்ஷிப்பில் தனிநபர் பிரிவில் கைப்பற்றிய 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். ஏற்கனவே 2019-ம் ஆண்டில் தங்கம் வென்றிருந்தார்.
10 மீட்டர் ஏர்ரைபிள் ஜூனியர் பெண்கள் அணிகள் பிரிவில் சாம்பவி ஷ்ரவன், ஹருத்ட்யா ஸ்ரீ, இஷா அனில் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1896.2 புள்ளிகளுடன் ஜூனியர் ஆசிய மற்றும் உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. சீனா (1884.9 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், தென்கொரியா(1879 புள்ளி) வெண்கலப்பதக்கமும் பெற்றது.