இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி: 3-ம் நாளில் இந்தியாவின் முடிவுகள்
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடரில் இருந்து சிந்து வெளியேறினார்.;
ஜகர்த்தா,
2025-ம் ஆண்டுக்கான இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் இந்தோனேசியாவில் நடந்து வருகின்றன. இதில், ஒற்றையர் மகளிர் போட்டியில், இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து, காலிறுதிக்கு முந்தின சுற்றில் தாய்லாந்து நாட்டின் போர்ன்பாவீ சோச்சுவாங் என்பவரை எதிர்த்து விளையாடினார்.
2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான சிந்துவை, 22-20, 10-21, 18-21 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சோச்சுவாங் வெற்றி பெற்றார். இந்த போட்டி 1 மணிநேரம் 18 நிமிடங்கள் வரை நீடித்தது.
போட்டியின் முதல் செட்டை கைப்பற்றுவதில் தோல்வியடைந்தபோதும், 2-ம் செட்டை சிந்து கைப்பற்றினார். இதனால், வெற்றியை முடிவு செய்யும் 3-வது செட்டுக்கான போட்டி விறுவிறுப்பாக நடந்தது. எனினும், அந்த செட்டிலும் சிந்து வெற்றி பெறவில்லை.
இதனால், இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடரில் இருந்து சிந்து வெளியேறினார். ஒற்றையர் போட்டியில் பதக்கம் பெறும் இந்தியாவின் கனவும் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த போட்டி தொடரின் 3-ம் நாளில் இந்தியாவின் வெற்றி, தோல்வி பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.
இதில், மகளிர் இரட்டையர் போட்டியில் ஜப்பானின் யுகி புகுஷிமா மற்றும் மயு மத்சுமோடோ இணையிடம், இந்தியாவின் த்ரீஷா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் இணை 21-13, 24-22 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தது.
ஆடவர் இரட்டையர் போட்டியில், டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜேயர் மற்றும் ஆண்டர்ஸ் ஸ்காருப் ராஸ்மஸ்சென் இணையை, சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை 16-21, 21-18, 22-20 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
கலப்பு இரட்டையர் போட்டியில், தாய்லாந்தின் தேச்சாபோல் புவாவரனுக்ரோ மற்றும் சுபிஸ்சரா பேவ்சம்ப்ரான் இணையிடம் இந்தியாவின் சதீஷ் கருணாகரன் மற்றும் ஆதியா வரியாத் இணை 21-7, 21-12 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தது.