எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற கார்த்திகா
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தியது.;
Image Courtesy: @EPSTamilNadu
சென்னை,
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தியது. இதில் சென்னை - கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடி தந்தார். இந்தத் தொடரில் அவர் இந்திய அணியின் துணை கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
ஆசிய இளையோர் போட்டியில் வெற்றி வாகை சூடிய இந்திய வீராங்கனை, சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகாவை வாழ்த்தி மகிழ்ந்தேன்.
எளிய பின்னணியில் இருந்து தன்னுடைய திறமையாலும், விடாமுயற்சியாலும் கபடி விளையாட்டில் ஜொலித்து வரும் கார்த்திகா, மென்மேலும் பல வெற்றிகளைக் குவித்து, தமிழ்நாட்டிற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் பெருமைகளை அள்ளிக் குவிக்க வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.