கேரளா: தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கன்னியாஸ்திரி
கன்னியாஸ்திரி சபீனா பல்வேறு தடகள போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் வயநாடு துவாரகா ஏ.யு.பி. பள்ளியில், 55 வயதான கன்னியாஸ்திரி சபீனா உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மாஸ்டர்ஸ் தடகள போட்டியில், 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடை தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் மற்ற வீரர்களை விட மின்னல் வேகத்தில் முந்தி சென்று வெற்றி பெற்ற கன்னியாஸ்திரி சபீனா, தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்த கன்னியாஸ்திரி சபீனா, 9-ம் வகுப்பில் தேசிய தடை தாண்டும் போட்டி, உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார். அடுத்த ஆண்டு உடற்கல்வி ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளதால், இறுதியாக ஒருமுறை தடகள போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பியதாகவும், அதற்காகவே மாநில மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் கலந்து கொண்டதாகவும் கன்னியாஸ்திரி சபீனா தெரிவித்துள்ளார்.