தேசிய சீனியர் கூடைப்பந்து இறுதிப் போட்டி: தமிழக அணியை வீழ்த்தி இந்தியன் ரெயில்வே ‘சாம்பியன்’
இறுதிப் போட்டியில் தமிழக அணியை வீழ்த்தி, இந்தியன் ரெயில்வே அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.;
சென்னை,
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் 75-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப் போட்டி நடப்பு சாம்பியன் தமிழ்நாடு அணி, இந்தியன் ரெயில்வேயை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழக அணி முதல் கால்பகுதியில் 10-20 என்று பின்தங்கியது. அதில் இருந்து மீள தமிழக அணி கடுமையாக முயற்சித்த போதிலும் கடைசி வரை ரெயில்வேயின் ஸ்கோரை எட்ட முடியவில்லை. முடிவில் தமிழக அணி 69-77 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவியது. தமிழக வீரர் அரவிந்த் குமார் 29 புள்ளி எடுத்தும் பலன் இல்லை. சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்தியன் ரெயில்வே அணிக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த தமிழகத்துக்கு ரூ.3 லட்சம் கிடைத்தது.
பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்திலும் நடப்பு சாம்பியனான இந்தியன் ரெயில்வே அணி பட்டத்தை தட்டிச் சென்றது. இதன் இறுதி ஆட்டத்தில் ரெயில்வே அணி 75-66 என்ற புள்ளி கணக்கில் கேரளாவை சாய்த்தது. புஷ்பா, ஹர்ஷிதா 22 மற்றும் 23 புள்ளிகள் வீதம் எடுத்து ரெயில்வே அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழக பெண்கள் அணி 76-49 என்ற புள்ளி கணக்கில் மத்திய பிரதேசத்தை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தியது.
தொடரின் மதிப்புமிக்க வீரர், வீராங்கனையாக குர்பாஸ் சிங்கும், புஷ்பாவும் (இருவரும் ரெயில்வே அணி) தேர்வு செய்யப்பட்டனர். பரிசுகளை இந்திய கூடைப்பந்து சங்க தலைவர் ஆதவ் அர்ஜூனா வழங்கினார்.