6 நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய தடகள போட்டி: ராஞ்சியில் இன்று தொடக்கம்

3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 37 பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.;

Update:2025-10-24 02:57 IST

கோப்புப்படம்

ராஞ்சி,

4-வது தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. கடந்த ஆண்டு மற்றும் கடந்த மே மாதத்தில் நடக்க இருந்த இந்த போட்டி 2 முறை தள்ளிவைக்கப்பட்டு தற்போது நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 37 பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.

இதில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம், நேபாளம், மாலத்தீவு, பூட்டான் ஆகிய 6 நாடுகளை சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த போட்டியில் பாகிஸ்தான் கலந்து கொள்ளவில்லை. போட்டி அமைப்பாளர்கள் விடுத்த அழைப்புக்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை.

கடைசியாக 2008-ம் ஆண்டு கொச்சியில் நடந்த தெற்காசிய தடகள போட்டியில் இந்தியா 24 தங்கம் உள்பட 57 பதக்கங்கள் வென்றிருந்தது. இந்த முறை 73 பேர் கொண்ட இந்திய அணி களம் காணுகிறது. நடப்பு சீசன் முடிந்து விட்டதால் இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் இடம் பெறவில்லை. இதனால் இளம் வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடரும் எனலாம். 63 வீரர்களை கொண்ட இலங்கை அணி இந்தியாவுக்கு சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்