1,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில சீனியர் தடகள போட்டி - சேலத்தில் இன்று தொடக்கம்
97-வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக மைதானத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது;
கோப்புப்படம்
சென்னை,
தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் சேலம் மாவட்ட தடகள சங்கம் சார்பில் 97-வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக மைதானத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் மொத்தம் 50 பந்தயங்கள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 1,200 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
ராகுல் குமார், தமிழரசு (100 மீட்டர் ஓட்டம்), கவுதம் (போல்வால்ட்), பரணிகா (போல்வால்ட்), நித்யா ராம்ராஜ் (100 மீட்டர் தடை ஓட்டம்), பிரதிக்ஷா யமுனா (நீளம் தாண்டுதல்) உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகளும் களம் காணுகிறார்கள்.
இந்த போட்டியின் அடிப்படையில், சென்னையில் ஆகஸ்டு 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறும் மாநிலங்களுக்கு இடையிலான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான தமிழக தடகள அணி தேர்வு செய்யப்படுகிறது. இந்த தகவலை தமிழ்நாடு தடகள சங்க பொதுச்செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.