பெண்கள் உலகக் கோப்பை செஸ்: இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு தகுதி

ஒரே நாட்டைசேர்ந்த 4 வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறி இருப்பது இதுவே முதல்முறையாகும்.;

Update:2025-07-20 06:31 IST

பதுமி,

பிடே பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. இதில் 46 நாடுகளை சேர்ந்த 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு (உலக சாம்பியன்ஷிப் தகுதி போட்டி) தகுதி பெறுவார்கள்.

'நாக்-அவுட்' முறையில் நடைபெறும் இந்த போட்டி தொடரின் 4-வது சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை கோனெரு ஹம்பி 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் உலக சாம்பியனான அலெக்சாண்ட்ரா கோஸ்ட்னிக்கை (சுவிட்சர்லாந்து) வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதேபோல் தமிழக வீராங்கனை ஆர்.வைஷாலி 4.5-3.5 என்ற புள்ளி கணக்கில் மிரெர்ட் கமலிடெனோவாவை (கஜகஸ்தான்) வெளியேற்றி காலிறுதியை எட்டினார். மற்ற ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் டி.ஹரிகா 3.5-2.5 என்ற புள்ளி கணக்கில் கேத்ரினா லாக்னோவையும் (உக்ரைன்), திவ்யா தேஷ்முக் 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் சூ ஜினெரையும் தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தனர். இந்த போட்டியில் ஒரே நாட்டைசேர்ந்த 4 வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறி இருப்பது இதுவே முதல்முறையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்