சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் கார்லஸ் அல்காரஸ் முன்னேற்றம்

டென்னிஸ் தரவரிசையில் கார்லஸ் அல்காரஸ் ஒரு இடம் முன்னேறி மீண்டும் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.;

Update:2025-05-20 01:45 IST

image courtesy: Internazionali BNL d'Italia twitter

சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னர் (இத்தாலி) முதலிடத்தை தக்க வைத்துள்ளார். ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் ஒரு இடம் முன்னேறி மீண்டும் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இத்தாலி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிசில் அல்காரஸ் நேர் செட்டில் சின்னரை வீழ்த்தி மகுடம் சூடியதன் மூலம் ஆயிரம் தரவரிசை புள்ளிகளை அள்ளினார். இதனால் அவருக்கு இந்த ஏற்றம் கிடைத்துள்ளது.

இதனால் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2-ல் இருந்து 3-வது இடத்துக்கு சரிந்தார். அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 4-வது இடத்திலும், இங்கிலாந்தின் ஜேக் டிராப்பர் 5-வது இடத்திலும், ஒலிம்பிக் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் அரினா சபலென்கா (பெலாரஸ்) முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த ஆண்டில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் போலந்தின் இகா ஸ்வியாடெக் 2-ல் இருந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு அவரது மோசமான தரநிலை இதுவாகும். இதனால் அமெரிக்காவின் கோகோ காப் ஒரு இடம் அதிகரித்து 2-வது இடத்தை பெற்றிருக்கிறார். ஜெசிகா பெகுலா 3-வது இடத்திலும், இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி 4-வது இடத்திலும் (ஒரு இடம் உயர்வு) உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்