தூத்துக்குடியை புகழ் பெற்ற தொழில் நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி தொகுதி முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் கனிமொழி எம்.பி. சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலையில் தூத்துக்குடி வந்தார். அவருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியது:
மக்களவைத் தேர்தலில் மீண்டும் தூத்துக்குடி தொதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் இங்கு பணியாற்றிய போது எனக்கு உறுதுணையாக இருந்த அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தூத்துக்குடி தொகுதி முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக, விளாத்திகுளம் சுற்றுவட்டாரங்களில், 361 கிராமங்களை உள்ளடக்கிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கூட்டு குடிநீர்த் திட்டம் மேற்கொள்ளப்படும்.
தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ள விண் பாஸ்ட் என்ற மின்சார கார் தயாரிக்கும் நிறுவனத்தில், தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள இளைஞர்கள், இளம் பெண்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், தூத்துக்குடியை புகழ் பெற்ற தொழில் நகரமாக மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக, தி.மு.க சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வருகிறது. மத்தியில் நிச்சயம் மாற்றம் வரும். அப்போது தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து கட்டாயம் விலக்கு அளிக்கப்படும்.
மக்களுக்கு எதிராக பா.ஜ.க கொண்டு வந்த அத்தனை மசோதாக்களையும் ஏற்றுக்கொண்டு அது வெற்றி பெறுவதற்காக அப்போது தமிழகத்தில் அ.தி.மு.க சார்பில் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாக வாக்களித்தார். மேலும், கடந்த முறை 10 ஆண்டுகள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தும், தமிழகத்திற்கு எதுவும் செய்யாத அவர்கள், தி.மு.க.,வை பார்த்து கேள்வி கேட்பதற்கு எந்த தகுதியும் இல்லை. ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு எதுவுமே செய்யாத ஒரே முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான்.
இவ்வாறு அவர் கூறினார்.