‘‘சிவாஜி கணேசன் மாஸ்டர்; நாம் சீடர்கள்’’ –அமிதாப்பச்சன்

சிவாஜி கணேசன் மாஸ்டர், நாம் சீடர்கள் என்று இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.
இந்தி நடிகர் அமிதாப்பச்சன் முதல் தடவையாக ‘உயர்ந்த மனிதன்’ என்ற தமிழ் படத்தில் நடிக்கிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். தமிழ் வாணன் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கி உள்ளது. அமிதாப்பச்சனும் மற்ற நடிகர்–நடிகைகளும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார்.
அமிதாப்பச்சன் வேட்டி–சட்டையில் வயதான தோற்றத்தில் நடிப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது சுவரில் மாட்டப்பட்டு உள்ள சிவாஜி கணேசன் படத்தின் முன்னால் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அமிதாப்பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தின் கீழே, ‘‘சிவாஜி கணேசன் என்ற மாஸ்டரின் கீழ் அவரது சீடர்களாகிய நானும் சூர்யாவும் உள்ளோம். சிவாஜியின் படத்தை சுவரில் மாட்டி அவருடைய பாதம் தொட்டு வணங்கி நாங்கள் இருவரும் மரியாதை செய்தோம். அவர் மாஸ்டர்.. நாம் அவருடைய சீடர்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
சிவாஜி கணேசன் நடித்த கைகொடுத்த தெய்வம் படத்தின் இந்தி ரீமேக்கான ‘பியார் கி கஹான்’ என்ற படத்தில் அமிதாப்பச்சன் நடித்துள்ளார். தற்போது அவர் நடித்து வரும் ‘உயர்ந்த மனிதன்’ பட தலைப்பும் 1968–ல் சிவாஜி கணேசன் நடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story