வெப் தொடரில் நடிகை பூர்ணா

வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் முன்னணி நடிகர், நடிகைகள் பலர் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள்.
ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து வந்த குயின் வெப் தொடரில் ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால் ஆகியோர் நடித்து இருந்தனர்.
கரோலின் காமாட்சி வெப் தொடரில் மீனா நடித்துள்ளார். அமலாபால் இந்தி வெப் தொடரில் நடிக்கிறார். காஜல் அகர்வால், தமன்னா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், பிரியாமணி ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள். சத்யராஜ், சீதா, சுகன்யா ஆகியோரும் வெப் தொடரில் நடிக்க வந்துள்ளனர்.
தற்போது நடிகை பூர்ணாவும் வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடருக்கு கண்ணாமூச்சி என்று பெயர் வைத்துள்ளனர். விவேக் பிரசன்னா, அம்சாத் கான், ஆர்த்யா ஆகியோரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடரை அவினாஷ் ஹரிஹரன் இயக்கி உள்ளார்.
காதுகேளாத மகள் ஐஷூவுடன் பூர்ணா புதிய குடியிருப்பில் நுழைகிறார். அங்கு மகள் திடீரென்று காணாமல் போகிறாள். அவளை தேடி அலையும் பூர்ணா, கடந்த காலத்தில் அவள் தங்கி இருக்கும் அதே வீட்டில் ஏற்பட்ட ஒரு அதிர்ச்சியான சம்பவம் பற்றி கேள்விப்படுகிறார். அது என்ன? மகள் ஐஷூவை கண்டுபிடித்தாரா என்பது கதை என்றார் இயக்குனர். இந்த தொடர் ஜி5 வெப் தளத்தில் வெளியாகிறது.
Related Tags :
Next Story