சினிமா செய்திகள்

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஐசரி கணேஷ் ரூ.25 லட்சம் உதவி + "||" + Isari Ganesh donates Rs 25 lakh

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஐசரி கணேஷ் ரூ.25 லட்சம் உதவி

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஐசரி கணேஷ் ரூ.25 லட்சம் உதவி
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஐசரி கணேஷ் ரூ.25 லட்சம் வழங்கி உள்ளார்.
சென்னை,

மறைந்த நடிகர் ஐசரி வேலன் 33-வது நினைவுநாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஐசரி வேலனின் மகனும், வேல்ஸ் பல்கலைக்கழக தலைவருமான ஐசரி கணேஷ் ரூ.25 லட்சம் உதவி வழங்கினார். ஏற்கனவே கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள நலிந்த நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கத்துக்கு ஐசரி கணேஷ் ரூ.10 லட்சம் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஐசரி கணேஷ் கூறியதாவது:-

எனது தந்தை ஐசரி வேலன் நினைவு நாளையொட்டி கடந்த 20 வருடங்களாக நடிகர் சங்கத்தில் நலிந்த நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களுக்கு வேட்டி, சேலை, உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறேன். அதுமட்டுமின்றி 20 வருடங்களாக நடிகர் சங்க உறுப்பினர்கள் 200 பேருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகையும் வழங்கி வருகிறேன்.

இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கினால் எனது தந்தையின் நினைவு நாளையொட்டி உறுப்பினர்களுக்கு நேரில் உதவிகள் வழங்க இயலவில்லை. எனவே நடிகர் சங்க உறுப்பினர்கள் 2 ஆயிரத்து 500 பேருக்கு அவர்கள் வங்கி கணக்கில் தலா ரூ.1,000 வீதம் ரூ.25 லட்சம் செலுத்தி உள்ளேன்.

நலிந்த நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்கள் 1,000 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் அரிசி உள்ளிட்ட உதவி பொருட்களை வழங்கி உள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி. இதுபோல் நடிகர் சங்கத்துக்கு நிதி வழங்கிய நடிகர்கள் லாரன்ஸ், விவேக் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஐசரி கணேஷ் கூறியுள்ளார்.