மக்களை கட்டிப்போட்ட சினிமா கொட்டகை: மதுரை நடனா, நாட்டியா, நர்த்தனா


மக்களை கட்டிப்போட்ட சினிமா கொட்டகை: மதுரை நடனா, நாட்டியா, நர்த்தனா
x

ராமராஜன் ஒரு நடிகர் என்பது மட்டுமே சினிமா ரசிகர்களுக்குத் தெரியும். அவர் சினிமா தியேட்டரில் வேலை பார்த்தவர், சினிமா தியேட்டர் முதலாளியாக இருந்தவர் என்பதை எல்லாம் பலர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

மதுரையைச் சேர்ந்த பிரபல டாக்டர் சந்திரபோஸ். அவருடைய மனைவி குணசுந்தரி, அவரும் ஒரு டாக்டர்தான். இருவரும் மதுரை சேர்மன் முத்துராமையர் சாலையில் மருத்துவமனை நடத்திவந்தனர்.

பெரும்பாலும் இதுபோன்ற தொழில் செய்துவருபவர் அதை விரிவுபடுத்தவும், பெரிய மருத்துவ மனைகள் கட்டவுமே பிரியப் படுவார்கள். இந்த மருத்துவத் தம்பதியோ மாறுபட்ட ரசனை கொண்டவர்களாக இருந்தனர். 1980-ம் ஆண்டுவாக்கில் ஒரு திரையரங்கம் கட்ட முடிவு செய்தார்கள். தங்களது மருத்துவமனை அருகில் இருந்த இடத்தில் அதற்கான கட்டிடப் பணிகள் தொடங்கின.

தியேட்டருக்கான வரைபடத்தைக் கொச்சியை சேர்ந்த பிரபல கட்டிட வடிவமைப்பாளர்கள் ஜாய் அலெக்சாண்டர், ஜோ மலிக்கல் ஆகியோர் உருவாக்கித்தர மதுரையைச் சேர்ந்த பிரபல என்ஜினீயர் எஸ்.பி.சீனிவாசன் தியேட்டரைக்கட்டினார்.

முதலில் ஒரு தியேட்டர் மட்டும் கட்டத் திட்டமிட்டனர். அப்போது மல்டி காம்ப்ளக்ஸ் கட்டுவது பிரபலமாகி வந்த நேரம். இதனால் தரைத் தளத்தில் பெரிய தியேட்டரும், முதல் தளத்தில் ஒரு தியேட்டரும் கட்டலாம் என திட்டத்தைச் சற்று விரிவுபடுத்தினர்.

பிறகு தரைத் தளத்தில் ஒன்றும், முதல் தளத்தில் இரண்டும் கட்டினால் என்ன? என்று எண்ணம் விரிவடையவே மொத்தம் 3 தியேட்டர்களைக் கட்டி முடித்தார்கள்.

புதிய தியேட்டர்களுக்கு 'நடனா, நாட்டியா, நர்த்தனா' என்ற கலைசார்ந்த பெயர்களைச் சூட்டினார்கள்.

நடனா தியேட்டர் பழங்கால கட்டிடக் கலையை பிரதிபலிப்பதாக அமைந்தது. நாட்டியா சீன கட்டிடக்கலையை எதிரொலிக்கும் வகையில் சிவப்பு நிற வர்ணம் தீட்டப்பட்டு இருந்தது. நர்த்தனா தற்கால கட்டிடக்கலையை வெளிப்படுத்தியது.

தியேட்டர் வளாக முகப்பு நடனக் கலைக்கு சிறப்பு சேர்ப்பதாக கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

1982-ம் ஆண்டு தீபாவளி நாளில், நடனா தியேட்டரில் முதல் படத்தை திரையிட முடிவுசெய்தார்கள். ஆனால் தியேட்டர் லைசென்சு நடைமுறைகள் தாமதமானதால் சில மாதங்கள் கழித்து 1983-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை நாளில் முதல் படமாக 'அபூர்வ சகோதரிகள்' திரையிடப்பட்டது.

1984-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரஜினிகாந்த் நடித்த 'தம்பிக்கு எந்த ஊரு' படம் இங்கே திரையிடப்பட்டது. அப்போது தான் மதுரையில் நடனா தியேட்டர் பிரபலமானது. நூறு நாட்களை தாண்டி அந்தப்படம் ஓடியது. அதன் மூலம் தியேட்டருக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது.

அடுத்ததாக ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் அதே ஆண்டில் நடனா தியேட்டரில் வெளியானது. அந்தப்படமும் நூறு நாட்களைக் கடந்து ஓடி, தியேட்டருக்குப் பெருமை சேர்த்தது. அதன்மூலம் ஓராண்டில் மதுரையில் உள்ள தியேட்டர்களில் 'நடனா' 2-வது இடத்தைப் பிடித்தது. அதன்பின் கமல், கார்த்திக், விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்கள் திரையிடப்பட்டு வெற்றிகரமாக நடனா, நாட்டியா, நர்த்தனா காம்ப்ளக்ஸ் இயங்கிவந்தது.

1990-களில் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் மேலோங்க, தியேட்டர்களுக்கான முக்கியத்துவம் குறையத் தொடங்கியது.

அதேநேரம் மருத்துவத் துறையில் கவனம் செலுத்திவந்த டாக்டர் சந்திரபோசுக்கு, தியேட்டரை திறம்பட நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அந்தநிலை பற்றி இனி அவருடைய மூத்த மகன் டாக்டர் விவேக்போஸ் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்போம்.

"அந்தச் சமயத்தில் நானும், என் தம்பி விஜயும் வெளியூர்களில் மருத்துவம் படித்து வந்தோம்.

எங்கள் இருவரையும் அழைத்த என் தந்தை, மருத்துவத்தையும், தியேட்டரையும் சேர்த்து நிர்வகிப்பதில் சிரமம் இருக்கிறது. உங்களுக்கு ஆர்வம் இருந்தால் தியேட்டர் தொழிலை கவனிக்கலாமே! என்றார். நாங்கள் இருவருமே மருத்துவத் துறையில் முழுநேரமும் ஈடுபட விரும்புகிறோம் என்றோம். அப்போது ராமராஜனின் கரகாட்டக்காரன் படம், எங்கள் காம்ப்ளக்சில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அவர் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தார். நாங்கள் முன்வந்ததால் அவரது தரப்பினர் எங்களை அணுகி, நடனா தியேட்டர் காம்ப்ளக்சை விலைக்கு கேட்டனர். ஏற்கனவே நிர்வகிக்க சிரமப்பட்டு வந்ததால், அதை அவருக்கு கொடுத்து விட்டோம்.

ராமராஜன் தரப்பினரும் சில ஆண்டுகளுக்குப் பிறகு வேறு ஒருவரிடம் கைமாற்றிவிட்டனர். தற்போது ரியல் எஸ்டேட்காரர்களால் இடிக்கப்பட்டு, அங்கு குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன" என்றார்.


Next Story