வங்கியில் குறைவான தொகை வழங்கப்பட்டதை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல்


வங்கியில் குறைவான தொகை வழங்கப்பட்டதை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 Dec 2016 4:00 AM IST (Updated: 24 Dec 2016 2:45 AM IST)
t-max-icont-min-icon

வங்கியில் குறைவான தொகை வழங்கப்பட்டதை கண்டித்து வேப்பந்தட்டை அருகே பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பால்கொள்முதல் தொகையை... பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உடும்பியத்திலுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், உடும்பியம், க

வேப்பந்தட்டை,

வங்கியில் குறைவான தொகை வழங்கப்பட்டதை கண்டித்து வேப்பந்தட்டை அருகே பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பால்கொள்முதல் தொகையை...

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உடும்பியத்திலுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், உடும்பியம், கள்ளப்பட்டி, நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினராக இருக்கின்றனர். இவர்களிடம் இருந்து தினமும் காலை, மாலை வேளைகளில், பால்உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பால்கொள்முதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 60 நாட்களாக கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படாமல் நிலுவையில் இருந்தது.

இந்த நிலையில் பால் கொள்முதல் நிலுவை தொகை, பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரவு வைக்கப்பட்டது. இந்த பால்உற்பத்தியாளர்கள் அனைவருக்கும் பூலாம்பாடியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

சாலை மறியல்

நேற்று நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பூலாம்பாடியிலுள்ள வங்கிக்கு பணம் எடுக்க சென்றனர். அங்கு வங்கியில் அதிகபட்சமாக ஒரு நபருக்கு ரூ.2 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நரசிங்கபுரத்தை சேர்ந்த பால்உற்பத்தியாளர்கள் வங்கியின் செயல்பாட்டை கண்டித்து உடுப்பியம் பகுதியில் உள்ள பெரம்பலூர்–ஆத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில், வாரத்திற்கு ஒரு முறை வங்கி கணக்கிலிருந்து ரூ.24 ஆயிரம் எடுக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் பூலாம்பாடி தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அதிகபட்சமாகவே ரூ.2 ஆயிரம் மட்டும் வழங்குவதால் தினசரி வேலையை விட்டு விட்டு வங்கிக்கு வந்து நிற்கவேண்டிய சூழல் உள்ளது. இதனால் எங்களது பால்மாடுகளை மேய்ச்சலுக்கு விட முடியவில்லை. இதனால் பால்உற்பத்தி குறைந்து வருகிறது. எனவே பால் உற்பத்தியாளர்களுக்கு அதிகபட்சமாக வாரத்திற்கு ஒரு முறை மத்திய அரசு அறிவித்தது போல் ரூ.24 ஆயிரம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதற்கிடையே சாலைமறியல் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் அரும்பாவூர் போலீசார் விரைந்து வந்து, பால்உற்பத்தியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதை தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் பெரம்பலூர்–ஆத்தூர் சாலையில் சுமார் 1 மணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story