தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை; போலீசாருடன் தள்ளுமுள்ளு 345 பேர் கைது


தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை; போலீசாருடன் தள்ளுமுள்ளு 345 பேர் கைது
x
தினத்தந்தி 27 Dec 2016 4:30 AM IST (Updated: 26 Dec 2016 11:57 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 345 பேர் கைது செய்யப்பட்டன

தஞ்சாவூர்,

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 345 பேர் கைது செய்யப்பட்டனர்.

முற்றுகைப்போராட்டம்

தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்கங்கள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் துரைமாணிக்கம் தலைமையில் இந்த முற்றுகை போராட்டம் நடந்தது.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருஞானம், துணை செயலாளர் முத்து.உத்திராபதி, நகர செயலாளர் ராஜேந்திரன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாரன், தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட துணைத்தலைவர் மீராசன், ஒன்றிய செயலாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வறட்சி மாநிலம்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரண பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். சென்னை. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கான நிவாரண பணிகளை விரைவு படுத்த வேண்டும். வறட்சி காரணமாக அதிர்ச்சி அடைந்து தற்கொலை செய்த விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும். வேலை வாய்ப்பை இழந்துள்ள விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். தேசிய வேளாண் காப்பீடு திட்ட இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடன் வழங்க வேண்டும். நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடுவர்மன்ற குழுக்களை கலைத்து விட்டு தேசிய நதிநீர் தீர்ப்பாயம் என்ற ஒரே அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போலீசாருடன் தள்ளுமுள்ளு

முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலெக்டர் அலுவலக வாசல் முன்பு தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலெக்டர் அலுவலக வாசலில் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புக்கம்பிகளுக்குள் அனுமதித்தனர். அதன்படி அவர்கள் அங்கேயே நின்றுகொண்டு கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புக்கம்பிகளை தள்ளிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது இரும்பு தடுப்புக்கம்பி பட்டத்தில் 3 பேர் காயம் அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 123 பெண்கள் உள்பட 345 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story