நாகையில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி

நாகையில் சுனாமி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் சுனாமியால் உயிரிழந்த தங்கள் உறவினர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சுனாமி நினைவு தினம் கடந்த 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந் தேதி ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலையால் நாகை மாவட்டத்தில்
நாகப்பட்டினம்,
நாகையில் சுனாமி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் சுனாமியால் உயிரிழந்த தங்கள் உறவினர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
சுனாமி நினைவு தினம்கடந்த 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந் தேதி ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலையால் நாகை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இந்த பேரலை நாகை மாவட்டத்திற்கு ஆறாத காயத்தை உண்டாக்கியது. சுனாமி நினைவு தினம் நேற்று 12–வது ஆண்டாக நாகை மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நம்பியார் நகர், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், வேளாங்கண்ணி, செருதூர், காமேஸ்வரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இறந்த உறவினர்களுக்கு தர்ப்பணம் செய்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கடலோர பகுதிகளில் மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
பெண்கள் ஒப்பாரிநாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூணில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தனார். மேலும், நினைவு தூணில் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பழனிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், உதவி கலெக்டர் கண்ணன், முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரமோகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அன்னை சத்யா அரசு காப்பகத்தில் உள்ள சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மவுன ஊர்வலம் நடைபெற்றது. மேலும், நாகை நம்பியார் நகர் மீனவ மக்கள் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. வெளிப்பாளையம் ஏழைப்பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நம்பியார் நகரில் உள்ள நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கடலுக்கு சென்று அங்கு யாகம் வளர்க்கப்பட்டு, இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் நம்பியார் நகரை சேர்ந்த பெண்கள் கடலை பார்த்தவாறு ஒப்பாரி வைத்து கதறி அழுதனர்.
கீச்சாங்குப்பம்இதைதொடர்ந்து நாகையை அடுத்த கீச்சாங்குப்பம் கிராமத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக ஆத்ம சாந்தி ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தேசிய மீனவ பேரவை தலைவர் ராஜேந்திரன் உள்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சுனாமியில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவு தூணுக்கு மாணவ, மாணவிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் சார்பில் டாடா நகரில் இருந்து மவுன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று அக்கரைப்பேட்டையில் உள்ள நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கடலில் மீனவர்கள் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.
வேளாங்கண்ணிஅதேபோல், கிறிஸ்துமஸ் கொண்டாட வேளாங்கண்ணி வந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் நினைவாக வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரைச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக வேளாங்கண்ணி கடற்கரையில் இருந்து பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் பொதுமக்கள் மவுன ஊர்வலமாக வந்து கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் பங்கு தந்தை சூசைமாணிக்கம், முன்னாள் பேருராட்சி தலைவர் தாமஸ்ஆல்வாஎடிசன், அ.தி.மு.க. நகரசெயலாளர் கிங்ஸ்லிஜெரால்டு, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சார்லஸ், ரோட்டரி சங்கத்தை சேர்ந்த சாந்தி சார்லஸ், வர்த்தக சங்கங்களின் தலைவர் பாஸ்கர் உள்பட பங்கு தந்தையர்கள், வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தாங்கள் இழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், செருதூர், காமேஸ்வரம் ஆகிய மீனவ கிராமத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வேதையன் தலைமையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் முன்னாள் கீழ்வேளூர் தொகுதி செயலாளர் பால்ராஜ், அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளர் மீனா, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பூவைவரதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களிலும் பொதுமக்கள் அவரவர்களது கிராமங்களில் அஞ்சலி செலுத்தினர். சுனாமி பேரலை தாக்கி 12 ஆண்டுகள் கடந்து இருந்தாலும், மீனவர்கள் தங்களது உறவினர்களை இழந்த தாக்கதில் இருந்து இன்னும் மீளவில்லை.
மேலும், இந்திய வர்த்தக தொழிற்குழுமம் சார்பில் பழைய பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல் யாதவதெரு வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் நாகேஸ்வரன், செயலாளர் வினோத் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சுனாமி நினைவுதினத்தையொட்டி நாகை அக்கரைப்பேட்டை கடைற்கரையில் மணலால் கடல் சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது.