நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கருகிய பயிர்களுடன் விவசாயிகள் முற்றுகை போராட்ட வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும்

வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கருகிய பயிர்களுடன் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்
நெல்லை
வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கருகிய பயிர்களுடன் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் மு.கருணாகரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேல் முன்னிலை வகித்தார்.
திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்ட செவல்குளம் பகுதி விவசாயிகள் நேற்று கருகிய உளுந்து, மக்காச்சோளம், பாசிப்பயறுகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 21 ஆயிரம் ஏக்கரில் சோளப்பயிர்கள், உளுந்து, மக்காச்சோளம், பாசிப்பயறு, பருத்தி, மிளகாய், வாழை உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்து இருந்தோம். தற்போது மழை பொய்த்து போனதால் அந்த பயிர்கள் அனைத்தும் கருகிவிட்டன. இதனால் நாங்கள் மிகுந்த சிரமப்படுகிறோம். எனவே எங்களுக்கு ஏக்கருக்கு ரூ25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் சங்கம்தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கசமுத்து, துணைத்தலைவர் பெரும்படையார் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், தமிழ்நாட்டை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கவேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தில் வழங்கக்கூடிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பாப்பான்குளம் பகுதியில் விவசாயிகள் தங்கள் பகுதியில் கருகிய சேனைகிழங்கு, சிறுகிழங்குகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.
பீடித்தொழிலாளர்கள்நெல்லை மாவட்டத்தில் உள்ள பீடித்தொழிலாளர்கள் தங்களுக்கு வழக்கம் போல் சம்பள பணத்தை வாரம் ஒருமுறை கையில் தர வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.
கடையம் அருகே உள்ள கட்டேறிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சவுந்தரராஜன், நிர்வாகிகள் செல்வராஜ், அத்தியப்பன், ராமசாமி, ஆறுமுகநயினார் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் எங்கள் ஊரில் 500–க்கும் மேற்பட்ட இந்து குடும்பத்தினர் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். எங்கள் ஊரில் வசித்து வரும் ஒருவர் ஒரு வீட்டில் வைத்து ஜெபக்கூட்டம் நடத்தி வருகிறார். மேலும் எங்கள் ஊரில் அனுமதி இல்லாமல் கிறிஸ்தவ ஆலயம் கட்ட முயற்சி செய்து வருகிறார். இதனால் எங்கள் ஊரில் பொதுஅமைதிக்கு பிரச்சினை ஏற்படுகிறது. எனவே அங்கு வணிக வளாகம் என்ற பெயரில் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.
களகாடு அருகே உள்ள அப்பர்குளம், நடுவக்குளம், புதுக்குளம், மீனவகுளம், துவரைகுளம், சத்திரம், கள்ளிகுளம், பெருமாள்குளம் ஆகிய ஊர்களுக்கு பஸ்வசதி செய்து தர வேண்டும் என்று தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் கருப்பசாமிபாண்டியன் மனு கொடுத்தார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள பொய்கை கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றுக்கு மூடி அமைத்து தர வேண்டும் என்று ஊர்மக்கள் சார்பில் பெரியதுரை மனு கொடுத்து உள்ளார்.
நெல் கொள்முதல் நிலையம்எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் வடகரை நகர தலைவர் அப்துல் பாஸித் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், வடகரை நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும். அரசு ஆஸ்பத்திரியில் தேவையான டாக்டர்கள் நியமனம் செய்வதுடன் போதிய மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும். வடகரையில் இயங்கி வருகிற கால்நடை மருத்துவமனையை அங்கிருந்து வெளியூருக்கு மாற்றக்கூடாது. அடவிநயினார் அணைக்கட்டு மேட்டுக்கால் பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைத்துத்தர வேண்டும். வடகரை கீழ்பிடாகை பகுதியில் குடிநீர், தெருவிளக்கு அமைத்து தர வேண்டும் என்று கூறி உள்ளனர்.
முக்கூடல் அருகே உள்ள கபாலிபாறை கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் தங்கள் ஊர் பகுதியில் உள்ள ஆற்றில் மணம் அள்ளுவதை தடை செய்யவேண்டும் என்று கூறி மக்களை மிரட்டுகிற மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி தரையில் அமர்ந்து கொளுத்தும் வெயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.