இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு: வெளிமாநிலங்களில் புதிய கோணத்தில் விசாரணை


இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு: வெளிமாநிலங்களில் புதிய கோணத்தில் விசாரணை
x
தினத்தந்தி 30 Dec 2016 5:00 AM IST (Updated: 30 Dec 2016 1:39 AM IST)
t-max-icont-min-icon

கோவை, இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கை வெளிமாநிலங்களில் புதிய கோணத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் மீண்டும் ஆய்வு செய்ய உள்ளனர் . சசிகுமார் கொலை வழக்கு கோவையை அடுத்த துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 36). இந்

கோவை,

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கை வெளிமாநிலங்களில் புதிய கோணத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் மீண்டும் ஆய்வு செய்ய உள்ளனர் .

சசிகுமார் கொலை வழக்கு

கோவையை அடுத்த துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 36). இந்து முன்னணி பிரமுகர். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையை தொடர்ந்து கோவையில் கலவரம் உருவானது. கடைகள், பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். சம்பவம் நடந்து 90 நாட்களுக்குமேல் ஆகியும் கொலையாளிகள் பற்றிய எந்த தகவலும் கிடைக்காதது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறிய தடயத்தை கூட விட்டு வைக்காமல் கொலையாளிகள் நன்கு திட்டமிட்டு இந்த கொலையை அரங்கேற்றியுள்ளனர். கொலை செய்யப்பட்ட சசிகுமாரோடு செல்போனில் பேசியவர்கள், அவர்களது உறவினர்கள், நண்பர்கள் உள்பட இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியும் கொலை பற்றி சிறு துப்பும் கிடைக்கவில்லை.

கூடுதல் டி.ஜி.பி. ஆலோசனை

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. கரன்சின்கா நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தீவிரமாக விசாரணை நடத்தினார். சசிகுமார் கொலை வழக்கில் கொலையாளிகள் பிடிபடாதது ஏன்? துப்பு துலக்குவதில் உள்ள சிக்கல்கள் என்ன? தடயம் கிடைக்காதது ஏன்? என்பன உள்பட பல்வேறு தகவல்கள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். மேலும் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை சேகரித்த தகவல்கள் என்ன? யார்-யாரை விசாரித்தார்கள்? என்பன உள்பட பல்வேறு விவரங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார். இந்த வழக்கில் இனி எவ்வாறு விசாரணை மேற்கொள்ள வேண்டும்? என்று கூறி அதற்கான ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். அதன்பின்னர் கூடுதல் டி.ஜி.பி. கரன்சின்கா சென்னை திரும்பினார்.

இதுகுறித்து கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறியதாவது:-

சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை நடத்திய விசாரணையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. ஒரு தடயம் கூட இல்லாத அளவிற்கு கொலையாளிகள் நன்கு திட்டமிட்டு இதை அரங்கேற்றியுள்ளதின் மூலம் அவர்கள் கைதேர்ந்த கொலையாளிகள் என்பது தெளிவாகிறது. கொலையாளிகள் சசிகுமாரை பின்தொடர்ந்து வந்து கொலை செய்துள்ளனர் என்ற வாதமும் ஏற்கக் கூடியதாக இல்லை. அப்படி வந்திருந்தால் அவர்களின் உருவங்கள் போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடு, கடைகளில் பொருத்தப்பட்டிருந்த ஏதாவது ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கும். ஆனால் கொலையாளிகளின் உருவங்கள் எந்த கேமராவிலும் பதிவாகவில்லை.

புதிய கோணத்தில் விசாரணை

இந்த நிலையில் கூடுதல் டிஜி.பி. கரன்சின்கா கோவை வந்து சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதன்படி புதிய கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. சசிகுமார் கொலை செய்யப்பட்ட இடத்தில் முதலில் துடியலூர் போலீசார் தான் விசாரித்தனர். அதன்பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அங்கு விசாரணை நடத்தவில்லை. எனவே சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இரவு 10.30 மணியளவில் பொது இடத்தில் இந்த கொலை நடந்துள்ளதால் அதை அந்த பகுதியில் உள்ளவர்கள் யாரேனும் பார்த்தார்களா? அப்படி பார்க்கவில்லை என்றால் அந்த இடத்திலிருந்து கொலையாளிகள் வாகனங்களில் புறப்பட்டு சென்ற அடையாளங்கள், அல்லது அந்த வழியில் அவர்களை யாராவது பார்த்தார்களா? என்பன உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விசாரிக்கப்பட உள்ளது. குற்ற வழக்குகளில் சம்பவம் நடந்த உடன் கிடைக்கும் சிறு தடயமும் வழக்கு விசாரணையில் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் அதுபோன்ற எந்த தடயமும் இந்த வழக்கில் கிடைக்கவில்லை. இதனால் சிக்கலான இந்த வழக்கில் கள விசாரணையை (பீல்டு என்குயரி) முழுமையாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சம்பவ இடத்தில் மீண்டும் ஆய்வு செய்ய உள்ளனர் .

மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் ஒரு பிரிவினர் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் எல்லையோரங் களில் புதியகோணத்தில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சில முக்கியமான கொலை வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இருக்குமா? அந்த கொலையாளிகள் கோவைக்கு வந்தார்களா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் இனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்த உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story