ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி அமைதி பேரணி


ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி அமைதி பேரணி
x
தினத்தந்தி 13 Jan 2017 4:30 AM IST (Updated: 12 Jan 2017 8:52 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரம்பரிய மீட்புக்குழு சார்பில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி நடைபெற்ற அமைதி பேரணி

ராமநாதபுரம்,

பேரணி

தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்ற ஒருமித்த கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் அனைத்து கட்சியினர் மட்டுமல்லாது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டு ஆங்காங்கே பேரணி உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சமூக வலைத்தளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த கோரிக்கை அனைத்து தரப்பிலும் ஆதரவு பெருகி ஜல்லிக்கட்டு மீதான கோரிக்கை மிகப்பெரிய வலிமை பெற்றுவருகிறது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும், பாரம்பரிய விளையாட்டு உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பாரம்பரிய மீட்புக்குழு தொடங்கப்பட்டுஉள்ளது. இந்த மீட்புக்குழுவின் சார்பில் நேற்று ராமநாதபுரத்தில் மிகப்பெரிய அமைதி பேரணி நடைபெற்றது. சமூக வளைத்தளங்கள் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமல்லாது அனைத்து கட்சி பிரமுகர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

வேட்டி–சட்டை

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து இந்த பேரணியில் இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் கருப்பு சட்டை அணிந்து தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

ராமநாதபுரம் முருகன்கோவில் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த பேரணியில் அரசியல் கட்சிகளின் சார்பில் அ.தி.மு.க. மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதாசசிக்குமார், த.மா.கா.மாவட்ட தலைவர் ரவிச்சந்திரராமவன்னி, ம.தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் சுப்பிரமணியன், தே.மு.தி.க. முத்தீஸ்வரன், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் ஆத்மாகார்த்திக், மாவட்ட துணை தலைவர் குமார், நாம்தமிழர் கட்சி காளீஸ்வரன், மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் செந்தூர்பாண்டியன், இளைஞர்பாசறை முன்னாள் மாவட்ட செயலாளர் ஸ்டாலின்ஜெயசந்திரன், இளைஞரணி முத்து, முரளி, சுரேஷ், மண்டபம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பாலசங்கர், தொழில்நுட்ப பிரிவு துணைதலைவர் செந்தில்குமார், நகர் இளைஞர்பாசறை செயலாளர் மணிகண்டன், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக தென்மண்டல தலைவர் செந்தூர்பாண்டியன், மாநில துணைபொதுசெயலாளர் பத்மநாதன், தென்மண்டல பொருளாளர் ஜெயகார்த்திகேயன் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் ஆதரவாக பேரணியில் கலந்து கொண்டனர்.

கோ‌ஷம்

இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரண்மனையை அடைந்தது. அங்கு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. பேரணியில் ஏராளமான பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதில்லை என்றாலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் தாமாக முன்வந்து இந்த பேரணியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


Next Story