கோபி அருகே பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழா


கோபி அருகே பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழா
x
தினத்தந்தி 13 Jan 2017 4:00 AM IST (Updated: 13 Jan 2017 2:32 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்.

கடத்தூர்,

கொண்டத்து காளியம்மன்

கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூரில் மிகவும் பிரசித்திப்பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் காப்புகட்டி விரதம் கடைபிடித்து வந்தனர். தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

நேற்று முன்தினம் மாலையில் மாவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் வீடுகளில் இருந்து மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். பின்னர் இரவு குண்டம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து 18 கிராம பக்தர்கள் ஒன்று சேர்ந்து குண்டத்திற்கு பொங்கல் வைத்தனர். பின்னர் அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டு குண்டம் கண் திறக்கப்பட்டது. இதையடுத்து குண்டத்தில் கரும்புகள் (விறகுகள்) அடுக்கி வைக்கப்பட்டு தீப்பற்ற வைக்கப்பட்டது.

குண்டம் இறங்கிய பக்தர்கள்

நேற்று அதிகாலை அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி தலைமை பூசாரி கந்தவேல் தலைமையில் பூசாரிகள் படைக்கலம் எடுத்து தொட்டிப்பாளையம் பிரிவுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து கொண்டத்து காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கோவிலின் தலைமை பூசாரி கந்தவேல் குண்டத்தின் முன்பு வந்தார். அங்கு அவர் குண்டத்துக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை செய்தார். பின்னர் குண்டத்தின் மீது மலர், எலுமிச்சை பழம், தேங்காய், வாழைப்பழம் ஆகியவற்றை தூவினார். இதையடுத்து குண்டத்தில் இருந்து தீக்கனல்களை 3 முறை எடுத்து வானத்தை நோக்கி வீசினார். பின்னர் தலைமை பூசாரி கந்தவேல் குண்டம் இறங்கி தொடங்கி வைக்க அவரைத்தொடர்ந்து மற்ற பூசாரிகள் தீ மதித்தனர். இதையடுத்து பக்தர்கள் வரிசையாக குண்டம் இறங்கினார்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என அனைத்து தரப்பினரும் ஒன்றன்பின் ஒன்றாக குண்டம் இறங்கினார்கள். சிலர் கைக்குழந்தையுடனும், தீச்சட்டியை கையில் ஏந்தியபடியும் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், இந்து சமய அறநிலையத்துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகளும் தீ மிதித்தனர். திருப்பூர் சத்தியபாமா எம்.பி. உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் குண்டம் இறங்கினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்ததால் அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தீ மிதித்தனர்.

தேரோட்டம்

காலை 6.40 மணிஅளவில் தொடங்கிய குண்டம் பகல் 11 மணிஅளவில் நிறைவடைந்தது. விழாவையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) இரவு 11 மணிக்கு மலர் பல்லக்கு வீதி உலா நடைபெறும்.வருகிற 21-ந் தேதி இரவு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Next Story