அடுத்தடுத்து 3 பஸ்கள் மோதல் பெண் பக்தர்கள் உள்பட 20 பேர் படுகாயம்


அடுத்தடுத்து 3 பஸ்கள் மோதல் பெண் பக்தர்கள் உள்பட 20 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 13 Jan 2017 4:30 AM IST (Updated: 13 Jan 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே அடுத்தடுத்து 3 பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் பெண் பக்தர்கள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

பெரம்பலூர்,

அடுத்தடுத்து 3 பஸ்கள் மோதல்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா நஞ்சலைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பெண் பக்தர்கள் உள்பட 80 பேர் விரதமிருந்து தனியார் பஸ் மூலம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு அதே பஸ் மூலம் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அந்த பஸ்சை கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 57) என்பவர் ஓட்டி வந்தார்.

பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூர் அருகே பெரம்பலூர்-திருச்சி மெயின் ரோட்டில் நேற்று அதிகாலை 5 மணியளவில் அந்த பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு தனியார் பஸ் மீது மோதியது. இதில் அந்த பஸ் முன்னால் நின்ற சென்னை-திருநெல்வேலி செல்லும் அரசு பஸ் மீது மோதியது.

20 பேர் படுகாயம்

இந்த விபத்தில் தனியார் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கிய பெண் பக்தர்கள் உள்ளிட்டோர் அய்யோ... அம்மா... என அலறி னார்கள். இதில் நஞ்சலைக் குறிச்சியை சேர்ந்த முத்துலட்சுமி (40), சம்பூரணம் (55), கோவிந்தம்மாள் (55), சுதா, பாரதி, மணிமேகலை, புனிதா, அரசாயி உள்ளிட்ட பெண் பக்தர்கள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். மற்ற 2 பஸ்களில் இருந்தவர்கள் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் முத்துலட்சுமி, சம்பூரணம், கோவிந்தம்மாள் உள்பட 4 பேர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story