கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால் மகனை கொன்றேன்


கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால் மகனை கொன்றேன்
x
தினத்தந்தி 13 Jan 2017 4:30 AM IST (Updated: 13 Jan 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால் மகனை கொன்றதாக கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

ஈரோடு,

10-ம் வகுப்பு மாணவர்

ஈரோடு குமலன்குட்டை செல்வநகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 40). மருத்துவ பிரதிநிதி. இவருடைய மனைவி ரேவதி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கார் ஷோரூமில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் சரண் (16). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

ரமேஷ்குமாருக்கு குடிப்பழக்கம் உண்டு. மேலும், கடந்த 3 மாதங்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் செலவுக்கு பணம் இல்லாமல் ரமேஷ்குமார் சிரமப்பட்டு வந்ததுடன், வாழ்க்கையில் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது. இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர் தான் இறந்தபிறகு மகனுக்கு ஆதரவாக யாரும் இருக்க முடியாது என்று நினைத்தார். இதற்காக மகனை கொலை செய்ய திட்டமிட்டார்.

கொலை

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி வழக்கம்போல் ரேவதி வேலைக்கு சென்றுவிட்டார். அன்று மாலையில் சரண் பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த ரமேஷ்குமார், குடிநீரில் தூக்க மாத்திரையை கலந்து அதை சரணுக்கு கொடுத்தார். சரணும் அதை வாங்கி குடித்தார். மேலும், தற்கொலை முடிவில் இருந்த ரமேஷ்குமாரும் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார். இதில் மயங்கி விழுந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சரண் பரிதாபமாக இறந்தார். ரமேஷ்குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரணை கொன்ற ரமேஷ்குமாரை கைது செய்தனர். ரமேஷ்குமார் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

கல்விக்கட்டணம்

நான் சரியாக வேலைக்கு செல்லாததால் எனது மனைவியின் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தேன். இந்த நிலையில் எனது மகன் சரணின் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். எனது மகனும், “அம்மாவை எதற்காக சிரமப்படுத்துகிறீர்கள்? நீங்கள் வேலைக்கு சென்று கல்வி கட்டணத்தை கட்ட வேண்டியது தானே?...”, என்று என்னிடம் கோபித்துக்கொண்டான்.

மகனுடைய கல்வி கட்டணத்தைக்கூட செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதை நினைத்து வருந்தினேன். இதனால் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணினேன். நான் இறந்துவிட்டாலும் எனது மகனும் சிரமப்படுவானே என்று எனக்கு தோன்றியது. இதனால் அவனை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொள்ளலாம் என நினைத்தேன்.

சம்பவத்தன்று சரணுக்கு குடிநீரில் தூக்க மாத்திரையை கலந்துகொடுத்துவிட்டு நானும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டேன். பின்னர் மயங்கி விழுந்த அவனை குளியல் அறையில் படுக்க வைத்து குழாயில் தண்ணீரை திறந்துவிட்டேன். அப்போது நானும் மயங்கி விழுந்து விட்டேன். இதில் என் மகன் சரண் இறந்துவிட்டான். ஆனால் நான் பிழைப்பேன் என நினைக்கவில்லை. என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றிவிட்டார்கள்.

மேற்கண்ட தகவல்கள் ரமேசின் வாக்குமூலத்தில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story