ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்: கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்கள் உள்பட 65 பேர் கைது


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்: கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்கள் உள்பட 65 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jan 2017 2:00 AM IST (Updated: 18 Jan 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, கோவில்பட்டியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி,

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, கோவில்பட்டியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடியிலும் மாணவர்கள்–இளைஞர்கள் போராட்டம் நடத்திவிட்டு கலைந்து சென்றனர்.

திரண்ட இளைஞர்கள்

தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ‘ஏறு தழுவுதல்‘ எனும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி, இளைஞர்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். அதன்படி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக, கல்லூரி மாணவர்கள் ஆனந்த், சதீஷ், செந்தில் தலைமையில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் திரண்டனர்.

உடனே அங்கு வந்த கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ், சப்– இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார், உரிய அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது என்று மாணவர்கள், இளைஞர்களிடம் அறிவுறுத்தினர்.

ஊர்வலம்– தர்ணா போராட்டம்

இதையடுத்து அங்கிருந்து கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் வரையிலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

செண்பகவல்லி அம்மன் கோவில் அருகில் ஊர்வலமாக சென்றவர்களை போலீசார் மறித்தனர். இதையடுத்து கோவிலின் தென்புறம் ரத வீதியில் அமர்ந்து அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக தி.மு.க. மாணவர் அணி நகர துணை அமைப்பாளர் மயில்கர்ணன், காங்கிரஸ் கட்சி கேசவன், நாம் தமிழர் கட்சி தங்க மாரியப்பன், முத்துமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

65 பேர் கைது

தொடர்ந்து அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர்கள் உள்பட 65 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள ஆயிரவைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்க திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலை 6 மணியளவில் அனைவரையும் விடுவித்தனர்.

பின்னர் கல்லூரி மாணவர்கள் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி பெறப்பட்டு உள்ளது. இதில் அனைத்து கல்லூரி மாணவர்களும், அரசியல் கட்சியினரும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்தனர்.

தூத்துக்குடியில்...

தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எஸ்.ஏ.வி. பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் தலைமை தாங்கினார்.

மாணவர்கள்–இளைஞர்கள்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி ஜல்லிக்கட்டை ஆதரித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்தும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்றும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த போராட்டத்தில் சுமார் 200–க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

சமாதான பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story