சந்தவாசல் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

சந்தவாசலை அடுத்த ஆத்துவாம்பாடியில் வடக்கு தெரு மற்றும் குறும்ப தெருக்களில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது.
கண்ணமங்கலம்,
சந்தவாசலை அடுத்த ஆத்துவாம்பாடியில் வடக்கு தெரு மற்றும் குறும்ப தெருக்களில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிநீர் கேட்டு ஆத்துவாம்பாடி அருகே உள்ள விளாங்குப்பம் கூட்ரோட்டில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டவுன் பஸ்சையும் சிறை பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சந்தவாசல் போலீசார் மற்றும் போளூர் ஒன்றிய ஆணையாளர் மணிவண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சிறைபிடிக்கப்பட்ட பஸ்சை விடுத்து, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story