ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விடிய, விடிய மாணவ, மாணவிகள் போராட்டம்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விடிய, விடிய மாணவ, மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2017 4:02 AM IST (Updated: 19 Jan 2017 4:02 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவ, மாணவிகள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி,

மாணவர்கள் போராட்டம் தீவிரம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. திருச்சி பகுதியில் உள்ள அரசு கல்லூரிகள், சட்டக்கல்லூரி, தனியார் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் நேற்று ஒன்று திரண்டு பல்வேறு குழுக்களாக திருச்சி கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். காலையில் தொடங்கிய இந்த போராட்டம் இரவு வரை தொடர்ந்தது.ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகில் சாலையில் அமர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் போலீசார் எம்.ஜி.ஆர். சிலைக்கு நேர் எதிரே தென்னூர் அண்ணாநகர் செல்லும் சாலையை முழுவதுமாக தடை செய்தனர். அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் கோர்ட்டில் இருந்து எம்.ஜி.ஆர். சிலை நோக்கி வரும் சாலையிலும், கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையம் அருகில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்தை திருப்பி விட்டனர். இதன் காரணமாக மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தில்லைநகர் மற்றும் உறையூர் பகுதியில் இருந்து வாகனங்களில் வந்தவர்கள் எம்.ஜி.ஆர். சிலையை கடந்து செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

விடிய, விடிய நடந்தது

மாணவர்களின் போராட்டம் நள்ளிரவையும் தாண்டி விடிய, விடிய நடந்தது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மாணவ- மாணவிகள் சாலையில் அமர்ந்து இருந்தனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் உயர்த்தி பிடித்து அடிக்கடி கோஷம் போட்டனர். செல்போன்களில் பேட்டரி மூலம் வெளிச்சம் ஏற்படுத்தி அதனை அவ்வப்போது ஒரே நேரத்தில் உயர்த்தி பிடித்து கோஷம் போட்டனர். இதனால் அந்த பகுதியே பரபரப்புடன் காணப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு டீ, பிஸ்கட் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது. போராட்டக்குழு அமைப்பாளர்களே அவற்றை ஏற்பாடு செய்து இருந்தனர். மாணவர்கள் போராட்டம் நடத்திய பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Next Story