ஜல்லிக்கட்டுக்காக பொதுமக்கள், இளைஞர்கள் போராட்டம்


ஜல்லிக்கட்டுக்காக பொதுமக்கள், இளைஞர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2017 4:32 AM IST (Updated: 19 Jan 2017 4:32 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டா அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் ஒன்று திரண்டு உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலைமறியல் போராட்டத்தை நடத்தினர்.

டி.கல்லுப்பட்டி

டி.கல்லுப்பட்டி தேசியநெடுஞ்சாலை காளியம்மன்கோவில் அருகில் டி.கல்லுப்பட்டி பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகள் மற்றும் சமூகஆர்வலர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் பீட்டா அமைப்பைக் கண்டித்தும், அந்த அமைப்பைத் தடை செய்யவும், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்ககோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோ டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள சோலைப்பட்டி, பாப்புநாயக்கன்பட்டி, இளைஞர்கள், ராஜபாளையம், திருமங்கலம் தேசியநெடுஞ்சாலை சோலைப்பட்டி கருப்புக்கோவில் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொதுமக்களும், இளைஞர்களும் தாமாக முன்வந்து ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதேபோல பேரையூரில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஒன்று திரண்டு ஊர்வலமாக கோ‌ஷமிட்டபடி வந்தனர். அவர்கள் பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி

உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள காக்குவீரன்பட்டி, பசுக்காரன்பட்டி ஆகிய கிராமமக்கள் நேற்று கருப்பசாமி கோவில் அருகில் வயல்வெளியில் வாடிவாசல் அமைக்கப்பட்டு காளைகளை அவிழ்த்து விட்டு ஜல்லிக்கட்டை நடத்தினர். இதில் பக்கத்து கிராமங்களிலிருந்து காளைகளை இளைஞர்கள் மாடுகளை பிடித்தனர். தமிழர்களின் பாரம்பரியத்தை காப்பாற்றிவிட்டதாக அந்த கிராமமக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி மாணவ, மாணவிகள், ஜல்லிக்கட்டுத் தடைநீக்கவும், பீட்டா அமைப்பை தடைசெய்ய வலியுறுத்தியும், செக்கனூரணியில் ஆர்ப்பாட்டம் செய்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் தேனி, கம்பம், குமுளி, மதுரை செல்லும் பஸ்கள் ரோட்டில் நின்றன. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த செக்காணூரணி போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு மாணவ, மாணவியர்கள், கலைந்துசென்றனர்.

இதேபோல உசிலம்பட்டி பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி மாணவ, மாணவிகள் பீட்டா அமைப்பைக் கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பியபடியும், ஜல்லிக்கட்டுத்தடையை நீக்கக்கோரியும் ஊர்வலமாக உசிலம்பட்டி தேவர் சிலை வரை வந்தனர். பின்னர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பஸ்கள் கண்ணாடி உடைப்பு

உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நீதிமன்ற வளாகத்திலிருந்து ஊர்வலமாக வந்து தேவர்சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மக்கள் அதிகாரம், 58 கிராமபாசன விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மத்திய அரசும், ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் பீட்டா அமைப்பிற்கு பின்னால் ஒழிந்து கொண்டு, உச்சநீதிமன்ற துணையுடன் தமிழகத்திற்கு துரோகம் செய்துவருகிறது என்று கோ‌ஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார். நேற்றுமுன்தினம் இரவு கொங்கபட்டியில் அரசு பஸ் கண்ணாடியும், நல்லுத்தேவன்பட்டியில் தனியார் பஸ் கண்ணாடியும், உடைக்கப்பட்டது. அப்போது பஸ்கள் மீது கல்வீசியவர்கள் ஜல்லிக்கட்டுத்தடை நீக்கவும், பீட்டா அமைப்பைக்கண்டித்தும், கோ‌ஷமிட்டவாறு இருட்டில் மறைந்து சென்றனர்.

திருமங்கலம்

திருமங்கலம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். அதில் ஜல்லிக்கட்டு நடத்தவும், பீட்டா அமைப்பை கண்டித்தும் கோ‌ஷமிட்டனர். ஓமியோபதி கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக சென்று உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். திருமங்கலம் மதுரை ரோடு பகுதியில் கரடிக்கல் கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டனர். மேலும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த சுமார் ஆயிரம் பேருக்கு மேல் திரண்டு திருமங்கலத்தில் இருந்து சோழவந்தான் செல்லும் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். சுமார் 2 மணிநேரம் நடந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

மேலூர்

மேலூரில் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஊர்வலமாக மேலூர் பஸ்நிலையத்திற்கு வந்தனர். அங்கு அனைவரும் பஸ்நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து பீட்டாவை தடை செய்யக்கோரியும், ஜல்லிக்கட்டு நடத்திட அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கோ‌ஷமிட்டவாறு காலவரையின்றி தொடர் போராட்டத்தை தொடங்கினர்.

மாணவர்களின் போராட்ட செய்தி பரவியதால், சுற்று பகுதி கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மேலூரில் திரண்டனர். இதனால் மேலூரில் கூட்டம் அலைமோதியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டவுடன், போலீசார் போக்குவரத்தை மாற்றி அமைத்தனர். இந்த போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடந்து வருகிறது.


Next Story