வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி மும்முரம்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தி சீல் வைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
மும்பை,
மும்பை மாநகராட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தி சீல் வைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
மாநகராட்சி தேர்தல்மும்பை மாநகராட்சிக்கு வருகிற 21–ந்தேதி தேர்தல் நடக்கிறது. மும்பையில் உள்ள 227 வார்டுகளில் சிவசேனா, பா.ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மராட்டிய நவநிர்மாண் சேனா உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 275 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
தற்போது அவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
எந்திரங்களுக்கு சீல்ஓட்டுப்பதிவுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் தேர்தல் பார்வையாளர்கள், அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடந்து வருகின்றன.
பணிகள் முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேலும் தேர்தலின் போது வாக்காளர்கள் எந்த வித சிரமமும் இன்றி வாக்குப்பதிவு செய்வதற்கு தேவையான வசதிகளை வாக்குச்சாவடி மையங்களில் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.