அரசு பஸ் மீது லாரி மோதல்; 20 பேர் படுகாயம் பொதுமக்கள் சாலை மறியல்
விழுப்புரம் அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அருகே கப்பூர் கிராமத்தில் இருந்து நேற்று காலை அரசு டவுன் பஸ் ஒன்று விழுப்புரத்திற்கு புறப்பட்டது. பஸ்சை வாணியம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் ராதாகிருஷ்ணன் (வயது 46) என்பவர் ஓட்டிச்சென்றார். கண்டக்டராக பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த செந்தமிழ்ராஜ் (35) இருந்தார். பஸ்சில் 50–க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த பஸ் காலை 11 மணியளவில் திருப்பச்சாவடிமேடு என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிரே விழுப்புரத்தில் இருந்து கோவிந்தபுரம் மணல் குவாரிக்கு, மணல் ஏற்றுவதற்காக டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக வந்தது. இந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிரே வந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. உடனே விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
20 பேர் படுகாயம்இந்த விபத்தில் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பஸ் பயணிகள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என அபயக்குரல் எழுப்பினார்கள். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்து காயமடைந்த கப்பூரை சேர்ந்த பிரபு மனைவி சுதா (29), மகள் மோனலிசா (2), அய்யனார் மகள் ரம்யா (20), வேலாயுதம் (35), நெற்குணம் தேவராசு மனைவி தனம் (40), சபரிநாதன் (20), உஷா (20), அம்மு (18), சம்பூர்ணம் (50) உள்பட 20 பேரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சாலை மறியல்இதனிடையே இப்பகுதியில் மணல் லாரிகள் அதிவேகமாக செல்வதால் தொடர்ந்து சாலை விபத்துகள் நடப்பதாகவும், எனவே மணல் லாரிகளை செல்ல அனுமதிக்கக்கூடாது என கோஷமிட்டபடி காலை 11.20 மணியளவில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு டிப்பர் லாரியை பொதுமக்கள் வழிமறித்து கல்வீசி தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.
இந்த மறியல் காரணமாக விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விழுப்புரம் பகுதியில் இருந்து மணல் ஏற்ற வந்த லாரிகள் திருப்பச்சாவடிமேடு வழியாக கோவிந்தபுரத்திற்கு செல்லாமல் மாற்று வழியில் சென்றன.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசாரும், காணை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள், மணல் லாரிகள் அதிவேகமாக செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன் பிறகு காலை 11.40 மணியளவில் பொதுமக்கள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.