மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை ஹாசன் கோர்ட்டு தீர்ப்பு


மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை ஹாசன் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 15 Feb 2017 1:57 AM IST (Updated: 15 Feb 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஹாசன் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஹாசன்,

மனைவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஹாசன் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

நடத்தையில் சந்தேகம்

ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா ராமேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாஸ்(வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி ரேணுகா. இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த சீனிவாஸ், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி ரேணுகாவிடம் தகராறு செய்து வந்தார். மேலும் அவருடைய நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்–மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சீனிவாஸ், ரேணுகாவை அடித்து, உதைத்ததோடு அவருடைய வாயில் வி‌ஷத்தை ஊற்றினார். இதனால், வாயில் நுரை தள்ளிய நிலையில் ரேணுகா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சீனிவாஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

10 ஆண்டு சிறை

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ரேணுகாவை மீட்டு ஒலேநரசிப்புரா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சீனிவாசை கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது ஹாசன் கோர்ட்டிலும் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த சம்பவம் கடந்த 2014–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந்தேதி நடந்தது.

இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக ஹாசன் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம்சாட்டப்பட்ட சீனிவாசுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


Next Story