நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒப்பந்ததாரர்கள் தர்ணா


நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒப்பந்ததாரர்கள் தர்ணா
x
தினத்தந்தி 15 Feb 2017 4:30 AM IST (Updated: 15 Feb 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

சாலை, பாலம் அமைக்க டெண்டர் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை ஒப்பந்ததாரர்கள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருச்சி,

பாலம், சாலை அமைக்கும் பணி

புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூர்-விராலிமலை சாலையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்காக, கட்டுமான பணி ஒப்பந்ததாரர்களுக்கு திருச்சி சுப்பிரமணியபுரம் புரொபசர் காலனியில் உள்ள நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் வட்ட நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் டெண்டர் (ஒப்பந்தப்புள்ளி) கோரப்பட்டிருந்தது. இதற்கு புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 4 கட்டுமான பணி ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான டெண்டர் எந்த ஒப்பந்ததாரருக்கு ஒதுக்குவது என்பது குறித்து முடிவு எடுக்க நேற்று முன்தினம் திருச்சியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அதிகாரிகள் முன்னிலையில் கூட்டம் நடந்தது. இந்நிலையில் நேற்று காலை டெண்டர் கொடுத்திருந்த ஒப்பந்ததாரர்கள் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு வந்தனர்.

ஆனால் அலுவலகத்தின் வெளியே உள்ள அறிவிப்பு பலகையில் மேற்கண்ட பாலம் கட்டுதல் பணிக்காக விண்ணப்பித்திருந்த 3 ஒப்பந்ததாரர்களின் விண்ணப்பங்கள் முன் தகுதி ஆவணங்கள் போதுமானதாக இல்லாத காரணத்தால் டெண்டர் நிராகரிக்கப்பட்டது என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்த டெண்டர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சரின் தந்தைக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

முற்றுகையிட்டு தர்ணா

இதுகுறித்து கண்காணிப்பு பொறியாளர் விஜயாவிடம் கேட்பதற்காக நிராகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் அலுவலகத்தின் உள்ளே சென்றனர். ஆனால் அலுவலகத்தில் கண்காணிப்பு பொறியாளர் விஜயா இல்லை. இதனைத்தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒப்பந்ததாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஒப்பந்ததாரர்கள் கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடந்தன. ஆனால் அந்த பணிகள் பெரும்பாலும் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பிக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது. அரசு திட்ட பணிகளுக்காக சமர்ப்பிக்கப்படும் ஒப்பந்ததாரர்களின் விண்ணப்பங்களை அதிகாரிகள் பிரித்து பார்ப்பதே கிடையாது. ஒப்பந்த பணிகளுக்கான டெண்டர் விடுவதில் அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களிடம் பாரபட்சம் காட்டிவருகின்றனர். மேலும் அங்கு முறைகேடு நடக்கிறது என்று போலீசாரிடம் கூறினர். அரசு உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து ஒப்பந்ததாரர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story