பள்ளிபாளையத்தில் ரூ.48.26 லட்சம் கூட்டுறவு வளர்ச்சி–கல்வி நிதி அமைச்சர் தங்கமணி வழங்கினார்


பள்ளிபாளையத்தில் ரூ.48.26 லட்சம் கூட்டுறவு வளர்ச்சி–கல்வி நிதி அமைச்சர் தங்கமணி வழங்கினார்
x
தினத்தந்தி 28 Feb 2017 10:45 PM GMT (Updated: 28 Feb 2017 3:19 PM GMT)

நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சிறந்த விற்பனை சங்கமான திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள்

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சிறந்த விற்பனை சங்கமான திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், தணிக்கை அறிக்கையின்படி, 2013–14–ம் ஆண்டில் ரூ.3½ கோடியும், 2014–15–ம் ஆண்டில் ரூ.4 கோடியே 1 லட்சமும் நிகர லாபம் ஈட்டி உள்ளது. இதேபோல் பள்ளிபாளையம் உழவர் பணிக் கூட்டுறவுச் சங்கம் 2015–16–ம் ஆண்டு தணிக்கை அறிக்கைப்படி, ரூ.2 கோடியே 15 லட்சம் நிகர லாபம் ஈட்டி உள்ளது. கூட்டுறவு சட்ட விதிகளின்படி நிகர லாபத்திற்கு உரிய சட்டப்பூர்வ நிதி அரசுக்கு செலுத்தப்பட வேண்டும். இதனையொட்டி திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் சட்டப்பூர்வ நிதியான கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி ரூ.22 லட்சத்து 51 ஆயிரம், கூட்டுறவு கல்வி நிதி ரூ.15 லட்சம் மற்றும் உழவர் பணிக் கூட்டுறவுச் சங்கத்தின் சட்டப்பூர்வ நிதியான கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி ரூ.6 லட்சத்து 45 ஆயிரம் மற்றும் கூட்டுறவு கல்வி நிதி ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் என மொத்தம் ரூ.48 லட்சத்து 26 ஆயிரத்துக்கான காசோலைகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, பள்ளிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் டி.கே.சுப்பிரமணியத்திடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் கந்தசாமி, இணைப்பதிவாளர் ஹேமா, பள்ளிபாளையம் உழவர் பணி கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், துணை தலைவர் தனசேகரன், துணைப் பதிவாளர் திரவியம், கூட்டுறவு ஒன்றிய துணைத் தலைவர் துரைராஜ், கூட்டுறவு சார்பதிவாளர்கள் சண்முகம், குணசேகரன் மற்றும் சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story