தஞ்சை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி போடும் பணி


தஞ்சை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி போடும் பணி
x
தினத்தந்தி 2 March 2017 4:30 AM IST (Updated: 2 March 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி போடும் பணியினை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்,

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தஞ்சை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 12-ம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. தஞ்சையை அடுத்த மருங்குளத்தில் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) ராஜசேகரன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர்கள் நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் கலெக்டர் அண்ணாதுரை கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் கோமாரி நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 12-ம் சுற்று தடுப்பூசி போடும் பணி வருகிற 21-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக 76 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 87 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது.

தவிர்க்கலாம்

இது குறித்து கிராம ஊராட்சி ஒலிபெருக்கி மற்றும் துண்டுபிரசுரம் வாயிலாக பொதுமக்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை குறிப்பிட்ட இடங்களுக்கு கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 சதவீதம் முற்றிலும் கோமாரி நோய் தாக்குவதை தவிர்க்கலாம். பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் கால்நடை டாக்டர்கள் ஷெரீப், ரமேஷ், சக்திவேலன், சுரேஷ், புஷ்பலதா, லாவண்யா, கால்நடை ஆய்வாளர்கள் ராமு, ஞானசேகரன், முத்தமிழ்ச்செல்வி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஜான்சன், கருப்பையன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Next Story