‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி கவர்னர் மாளிகை முற்றுகை போலீசாருடன் தள்ளுமுள்ளு

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி கவர்னர் மாளிகை முற்றுகை போலீசாருடன் தள்ளுமுள்ளு; அதிகாரியின் கார் சிறைபிடிப்பு
புதுச்சேரி,
‘நீட்’ தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி திடீரென்று கவர்னர் மாளிகை முற்றுகையிடப்பட்டது. அப்போது சுகாதாரத்துறை இயக்குனரின் கார் சிறை பிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
‘நீட்’ தேர்வுமருத்துவ படிப்பில் சேர ‘நீட்’ தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ‘நீட்’ தேர்வு முறையில் இருந்து சில மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ‘நீட்’ தேர்வு முறையால் கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும் இந்த தேர்வு முறையில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசுகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டன.
இதுதொடர்பாக இருமாநில சட்டமன்றங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையிலும் இதுதொடர்பாக மத்திய அரசு எந்த முடிவையும் அறிவிக்காத நிலை இருந்து வருகிறது. இதற்கிடையே புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசின் சுகாதாரத்துறை சார்பில் திடீரென்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சுகாதார இயக்குனர் அலுவலகம் முற்றுகைஇந்த பிரச்சினையில் புதுச்சேரி கவர்னர் தக்க பரிந்துரையுடன் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பதுடன் ‘நீட்’ தேர்வு முறையில் இருந்து புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரும் அவசர சட்டத்தை ஜனாதிபதி ஒப்புதல் பெற்று வெளியிடுவதற்கான நடைமுறையை துரிதப்படுத்த வேண்டும் என்று ‘நீட்’ எதிர்ப்பு நடவடிக்கை குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் இதுதொடர்பாக எந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வருவதையொட்டி புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை நேற்று நீட் எதிர்ப்பு நடவடிக்கை குழுவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு ‘நீட்’ எதிர்ப்பு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் சிவ.வீரமணி தலைமை தாங்கினார். இதில், விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநிலக்குழு உறுப்பினர் முருகன், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், புதுச்சேரி தன்னுரிமை கழகம் சடகோபன், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் எழிலன், தமிழர் களம் அழகர், மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கவர்னர் மாளிகை திடீர் முற்றுகைபோராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜிந்தா கோதண்டராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. சுகாதாரத்துறை இயக்குனர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென அங்கிருந்து புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர்.
ஆனால் அவர்களை மீறி கவர்னர் மாளிகைக்கு சென்றனர். அங்கு அவர்கள் திடீரென்று கவர்னர் மாளிகை முன்பு அமர்ந்து ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள். கவர்னருக்கு எதிராகவும் கோஷமிடப்பட்டது. கவர்னர் மாளிகை திடீரென்று முற்றுகையிடப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீசார் முயன்றனர்.
இதையொட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசிக்கொண்டனர்.
கார் சிறைபிடிப்புஅப்போது அந்த வழியாக சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் தனது காரில் வந்தார். அவரது காரை போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்கள் வழிமறித்தனர். இதைத்தொடர்ந்து இயக்குனரின் கார் பின்னோக்கி இயக்கப்பட்டது. அந்த காரை செல்ல விடாமல் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சிறை பிடித்தனர்.
அப்போது வேறு வழியின்றி போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்து பஸ்சை வரவழைத்து அதில் ஏறச் செய்தனர். இதன்பின் அங்கிருந்து சுகாதார துறை இயக்குனர் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த போராட்டம் காரணமாக கவர்னர் மாளிகை முன்பு அடுத்தடுத்து பரபரப்பாக காணப்பட்டது. கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.