‘கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் அளிப்பது அரசின் கடமை’ மும்பை ஐகோர்ட்டு கருத்து


‘கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் அளிப்பது அரசின் கடமை’ மும்பை ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 2 March 2017 3:16 AM IST (Updated: 2 March 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

‘‘கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் அளிக்க வேண்டியது அரசின் கடமையே தவிர தர்மம் அல்ல’’ என்று மும்பை ஐகோர்ட்டு தெரிவித்தது.

மும்பை,

‘‘கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் அளிக்க வேண்டியது அரசின் கடமையே தவிர தர்மம் அல்ல’’ என்று மும்பை ஐகோர்ட்டு தெரிவித்தது.

சிறுமி கற்பழிப்பு

மும்பை போரிவிலியை சேர்ந்த 14 வயது சிறுமி, அதே பகுதியை சேர்ந்த வாலிபரால் திருமண ஆசை காட்டி கற்பழிக்கப்பட்டார். இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி ‘மனோதைர்யா யோஜனா’ திட்டத்தின்கீழ் தனக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க கோரி கடந்த ஆண்டு அக்டோபரில் மாநில அரசிடம் விண்ணப்பித்தார். இதைத்தொடர்ந்து, அவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

இதனால், அதிருப்தி அடைந்த சிறுமி, எஞ்சிய ரூ.2 லட்சத்தை தர உத்தரவிட கோரி மும்பை ஐகோர்ட்டை அணுகினார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இந்த கற்பழிப்பு சம்பவம் பரஸ்பர சம்மதத்தின்பேரில் நடந்தது போல் தெரிகிறது. ஆகையால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரக்கமற்ற அணுகுமுறை

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் மற்றும் நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசின் இந்த பதிலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:–

14 வயது சிறுமி பின்விளைவுகளை உணர்ந்து முதிர்ச்சியான முடிவுகளை எடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த பிரச்சினையை அரசு அணுகும் விதம் எங்களுக்கு பிடித்தமானதாக இல்லை. இது மிகவும் இரக்கமற்ற அணுகுமுறை. இதுபோன்ற விவகாரங்களை அரசு அதன் இதயம் மற்றும் ஆன்மாவில் இருந்து சிந்தித்து முடிவு எடுக்கும் வரையில், எதுவும் நடந்துவிடாது.

பிச்சைக்காரர்கள் அல்ல

இந்த வழக்குகளை உங்களுடைய (அரசு) இதயத்தில் இருந்து யோசித்து பாருங்கள். அதன்பின்னர், உணர்வுப்பூர்வமற்ற மனப்பான்மைக்கு இடம் இருக்காது. கற்பழிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்குவது அரசின் கடமையே தவிர தர்மம் அல்ல. அவர்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல. இழப்பீடு பெறுவது அவர்களின் உரிமை.

‘மனோதைர்யா’ என்றால் தன்னம்பிக்கை என்று பெயர். பாதிக்கப்பட்ட பெண்களின் நம்பிக்கையை அரசு ஊக்குவிக்க வேண்டும். ஆனால், அதற்கு எதிர்மாறாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 8–ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் புறநகர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story