பிளஸ்–2 தேர்வு தொடங்கியது மாவட்டம் முழுவதும் 31,527 மாணவ– மாணவிகள் எழுதினர்


பிளஸ்–2 தேர்வு தொடங்கியது மாவட்டம் முழுவதும் 31,527 மாணவ– மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 3 March 2017 4:30 AM IST (Updated: 2 March 2017 7:32 PM IST)
t-max-icont-min-icon

பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.

கடலூர்,

பிளஸ்–2 தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மொழிப்பாடங்களில் முதல் தாள் தேர்வு நடந்தது. இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தில் கடலூர் மற்றும் விருத்தாசலம் ஆகிய 2 கல்வி மாவட்டங்களிலும் 14 ஆயிரத்து 649 மாணவர்கள், 16 ஆயிரத்து 878 மாணவிகள் என மொத்தம் 31 ஆயிரத்து 527 மாணவ–மாணவிகள் எழுதினார்கள்.

இது தவிர 7 மையங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனித்தேர்வர்களும் தேர்வு எழுதினார்கள். தேர்வு மையங்களுக்குள் மாணவ– மாணவிகள் செல்லும் முன்பு கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களுக்குள் காலை 9.45 மணிக்கெல்லாம் மாணவ–மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். சரியாக காலை 10 மணிக்கு மாணவ–மாணவிகளுக்கு அறை கண்காணிப்பாளர்கள் வினாத்தாள்களை வழங்கினர்.

கண்காணிப்பு

வினாத்தாள்களை மாணவ–மாணவிகள் படித்து பார்க்க 10 நிமிடங்கள் வழங்கப்பட்டது. 10.10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட்டன. விடைத்தாள்களில் உள்ள புகைப்படம், தேர்வு எண் ஆகியவை தங்களுடையது தானா? என்பதை மாணவ–மாணவிகள் சரிபார்த்து விட்டு விடைகளை எழுதத்தொடங்கினர்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் என மொத்தம் 49 பேர் சொல்வதை எழுதுபவர் என்று நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினார்கள். கேள்விகளை ஆசிரியர்கள் படித்துக்காட்ட, பார்வையற்ற மாணவர்கள் சொன்ன விடைகளை ஆசிரியர்கள் விடைத்தாளில் எழுதினார்கள். பார்வையற்ற மாணவர்கள் சொல்வதை தான் ஆசிரியர்கள் எழுதுகிறார்களா? அல்லது அவர்களே விடைகளை எழுதுகிறார்களா? என்பதையும் ஆசிரியர் ஒருவர் கண்காணித்தார்.

பறக்கும் படையினர் சோதனை

தேர்வில் முறைகேடுகளை தடுக்க கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் 240 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படைகள் மற்றும் நிலைப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த படையினர் தேர்வு மையங்களுக்குள் சென்று திடீரென சோதனையிட்டனர். ஆனால் காப்பி அடித்ததாக யாரும் சிக்கவில்லை. முன்னதாக தேர்வு மையத்துக்குள் மாணவர்கள் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள் கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, குமாரபுரம் கிருஷ்ணசாமி மெட்ரிக்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மாணவர்கள் முறைகேடு செய்து தேர்வு எழுதுகிறார்களா? என்பதை தீவிரமாக கண்காணித்தனர். மதியம் 1.15 மணிக்கு தேர்வுகள் முடிவடைந்து தேர்வு மையங்களை விட்டு மாணவ–மாணவிகள் வெளியே வந்தனர். அவர்கள், தேர்வு எழுதிதாக இருந்ததாக கூறினர்.


Next Story